இந்தியா

ரூ.13 லட்சம் காருக்கு பதிலாக ரூ.10 லட்சம் கார் வாங்கி கொடுத்ததால் திருமணத்தை நிறுத்திய மணமகன்..

அரியானாவில் ஹீனா என்ற பெண்ணுக்கு, காவலராக பணிபுரிந்து வரும் குல்தீப் என்பவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் 6 மாதத்திற்கு முன்பு நடந்துள்ளது.

அரியானாவில் திருமணத்திற்கு பெண் வீட்டார் ரூபாய் 13 லட்சம் காருக்கு பதிலாக ரூபாய் 9 லட்சம் மதிப்பிலான காரை வாங்கி கொடுத்ததால், ஆத்திரமடைந்த மாப்பிள்ளை திருமணத்தை நிறுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

அரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் எம்.ஏ படித்துவிட்டு பள்ளி ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள ஹீனா என்ற இளம்பெண்ணுக்கு, காவல் அதிகாரியாக பணிபுரிந்து வரும் குல்தீப் என்பவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் கடந்த 6 மாதத்திற்கு முன்பு நிகழ்ந்துள்ளது.

இதையடுத்து மணமகன் தனது திருமணத்திற்கு வரதட்சணையாக கார் வேண்டுமென்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து சுமார் ரூபாய் 9.5 லட்சம் மதிப்புள்ள மாருதி ஆரா காரை மணமகளின் தந்தை புக்கிங் செய்துள்ளார்.

இந்த கார் மணமகனுக்கு பிடிக்கவில்லையென்றும், அவர் ரூபாய் 13 லட்சம் மதிப்புள்ள ப்ரீசா காரை விரும்புவதாகவும் மாமனாருக்கு தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக அவர் தான் புக்கிங் செய்திருந்த மாருதி ஆரா காரை ரத்து (கேன்சல்) செய்துவிட்டு, ப்ரீசா காரை புக்கிங் செய்துள்ளார்.

இதையடுத்து திருமணம் நவம்பர் 20 அன்று நடைபெற்ற போது, மண்டபத்திற்கு சாதாரண உடையில் தனது அம்மாவுடன் வந்த மணமகன், தான் கேட்ட ப்ரீசா கார் இருக்கிறதா என்று பார்த்துள்ளார்.

ஆனால் மாமனார் புக்கிங் செய்த கார் குறிப்பிட்ட தேதியில் டெலிவரி செய்வதற்கு காலதாமதம் ஆனதால், ஆத்திரமடைந்த மணமகன் திருமணத்தை நிறுத்தும்படி மாமனாரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து மாமனார் தனது மருமகனிடம் நடந்த விஷயத்தை கூறியுள்ளார். ஆனால் கார் வந்தால் தான் தாலி கட்டுவேன் என பிடிவாதமாக சொல்லிய மணமகன், திருமணத்தை நிறுத்திவிட்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், மணமகன் குல்தீப் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் இதுகுறித்து பெண்ணின் தகப்பனார் கூறுகையில், “திருமணத்திற்கு முன்பு சுமார் 25 கிராம் மதிப்புள்ள தங்க செயின் வேண்டுமென்று மணமகன் கூறினார்.

மேலும் அவரின் தாய்க்கு சுமார் 50 கிராம் மதிப்புள்ள நான்கு கம்மல்கள் வேண்டுமென்று கேட்டார். இதையடுத்து மணமகனின் அண்ணன் மற்றும் அண்ணிக்கும் இதேபோன்று நகைகள் வேண்டுமென்று கேட்டார்.

இதைத்தொடர்ந்து மணமகன் கேட்ட அனைத்து நகைகளையும் நான் ஆர்டர் செய்து வாங்கி கொடுத்தேன். மேலும் இந்த திருமணத்திற்காக சுமார் 2 லட்சம் மதிப்பில் செலவு செய்தேன்.

திருமண நாளில் சுமார் 1,500 விருந்தினர்களுக்கான உணவுகளை நான் ஏற்பாடு செய்திருந்தேன். இந்த திருமணத்திற்காக நான் ரூபாய் 30 லட்சம் வரை செலவு செய்தேன்.

ஆனால் தற்போது எல்லாம் வீணாகிவிட்டது; எனது மகள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளார்.

மணமகன் காவல் அதிகாரியாக இருப்பதால், காவல்துறை இந்த விஷயத்தில் சரியான விசாரணை நடத்த வேண்டும்” என பெண்ணின் தகப்பனார் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT