சாலைகளில் இரவு நேர பயணத்தின்போது விபத்துகளை தடுக்கும் வகையில் ஹெட்லைட் முறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர மத்திய மோட்டார் வாகனத்துறை முடிவு செய்துள்ளது.
இருசக்கர வாகனங்களில் உள்ள தானியங்கி முகப்பு விளக்குகள் (automatic headlamps) இனி பாஸிங் பீம் (குறைந்த ஒளி வீச்சு அல்லது Low-beam) முறையில் மட்டுமே செயல்படும் வகையில் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன. மேலும், இரவு நேரங்களிலும் மோசமான வானிலையிலும் வாகனங்கள் தெளிவாகத் தெரியும் வகையில், பேருந்துகள் மற்றும் பிற கனரக வாகனங்களில் தரமான பிரதிபலிப்பு டேப்கள் (reflective tapes) பயன்படுத்துவது கட்டாயமாக்கப்படவுள்ளது.
அதேவேளையில், மற்ற வாகன ஓட்டிகளின் பார்வையை மறைக்கும் அல்லது அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையிலான அதிக செறிவு கொண்ட முகப்பு விளக்குகளின் பயன்பாடும் அனைத்து வகையான வாகனங்களிலும் கட்டுப்படுத்தப்படவுள்ளது.
மத்திய மோட்டார் வாகன விதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பாக சாலைப் போக்குவரத்து அமைச்சகம் இம்மாற்றங்களைப் முன்மொழிந்துள்ளது. இந்த புதிய பாதுகாப்பு விதிமுறைகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வரவுள்ளன.
'லோ பீம்' முறையைப் பயன்படுத்துவதன் அவசியத்தை ஓட்டுநர்களுக்கு உணர்த்தவும், அவர்களை அதைப் பின்பற்றச் செய்யவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எதிர்பார்த்த பலனைத் தராத நிலையில், வாகனத் தரநிலைகளில் இத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
தானியங்கி முகப்பு விளக்கு தொடர்பான இந்த விதிமுறைகள் புதிய இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள வாகனங்களுக்குப் பொருந்தாது. தற்போதுள்ள தானியங்கி முகப்பு விளக்கு (AHO) அமைப்பானது, வாகனத்தின் அமைப்பைப் பொறுத்து 'லோ பீம்' அல்லது 'ஹை பீம்' (அதிக ஒளி வீச்சு) ஆகிய இரண்டிலும் செயல்படக்கூடியது. ஆனால், முன்மொழியப்பட்ட புதிய விதியின்படி, இந்த தானியங்கி அமைப்பு செயல்படும்போது முகப்பு விளக்கு 'லோ பீம்' முறையில் மட்டுமே எரிய வேண்டும்.
அதிக செறிவு கொண்ட முகப்பு விளக்குகளைப் பொறுத்தவரை, இருசக்கர வாகனங்களுக்கான அதிகபட்ச ஒளிச் செறிவு வரம்பு 1.5 லட்சம் கேண்டெலா (cd - ஒளிச் செறிவின் அடிப்படை அலகு) என்பதிலிருந்து 1 லட்சம் cd-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
நான்கு சக்கர வாகனங்களுக்கான (கார்கள்) அதிகபட்ச ஒளிச் செறிவு வரம்பு 2.25 லட்சம் cd-லிருந்து 1.5 லட்சம் cd-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஆய்வுகளின்படி, அதிக வண்ண வெப்பநிலை (colour temperature) கொண்ட முகப்பு விளக்குகள் மற்றும் முன்பக்க மூடுபனி விளக்குகளிலிருந்து (fog lamps) வெளிப்படும் வெண்மையான ஒளி சாலைப் பயனாளர்களுக்குக் கடுமையான கண் கூச்சலையும் (glare), அசௌகரியத்தையும், பார்வைத்திறன் குறைபாட்டையும் ஏற்படுத்துகிறது. இப்பிரச்சினையைச் சரிசெய்ய, அதிகபட்ச வண்ண வெப்பநிலை 6,500 கெல்வின் (K) ஆகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், மெயின் பீம் (முக்கிய ஒளி வீச்சு) முகப்பு விளக்குகளைப் பொருத்தும் உயரமானது, 'பாஸிங் பீம்' முகப்பு விளக்குகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட உயரத்திற்கு இணையாக இருக்க வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளது. இந்தியாவில் இரவு நேர சாலை விபத்துகளுக்கு முக்கியக் காரணங்களில் ஒன்றைச் சரிசெய்வதே இந்த நடவடிக்கைகளின் நோக்கமாகும். நகர்ப்புறங்களில் ஓட்டுநர்கள் 'ஹை பீம்' முறையில் முகப்பு விளக்குகளைப் பயன்படுத்துவதால், எதிரே வரும் வாகன ஓட்டிகளின் பார்வை தற்காலிகமாக மறைக்கப்பட்டு, விபத்து அபாயம் அதிகரிக்கிறது.