விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, ரத்து கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களின் விரிவான விவரங்களை வழங்க வேண்டும் என்று புதிய விமான விதிகளை அரசு அறிவித்துள்ளது.
அக்டோபர் 31 அன்று அறிவிக்கப்பட்ட 'பாரதிய வாயுயான் நியமம், 2026'-இன் கீழ், ஏதேனும் ஒரு "அசாதாரண சூழல்" ஏற்படும் பட்சத்தில், விமான கட்டணங்கள் தொடர்பாக விமான போக்குவரத்து அமைச்சகம் தலையிட முடியும்.
இருப்பினும், 'அசாதாரண சூழல்' என்பது எதை குறிக்கும் என்பதற்கான தெளிவான விளக்கங்கள் இதில் குறிப்பிடப்படவில்லை. இந்த விதிகள், 90 ஆண்டுகள் பழமையான 'விமான சட்டம், 1934'-க்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்ட 'பாரதிய வாயுயான் விதேயக், 2024'-இன் கீழ் உருவாக்கப்பட்டுள்ளன.
புதிய விதிகளின்படி, விமான நிறுவனங்கள் தங்கள் முன்பதிவு இணையதளத்திலும், பயணிகளுக்கு வழங்கப்படும் டிக்கெட்டிலும், விமான கட்டணம் மற்றும் அது தொடர்பான இதர கட்டணங்களின் விரிவான விவரங்களை காட்ட வேண்டும்.
இந்த விவரங்களில், "மொத்த தொகை, விமான கட்டணம், வரிகள், இதர கட்டணங்கள், ரத்து செய்வதற்கான கட்டணங்கள், பணத்தை திரும்ப பெறுவதற்கான நிபந்தனைகள் அல்லது வேறு ஏதேனும் கட்டணங்கள் இருந்தால், அவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக" குறிப்பிட வேண்டும். விமான நிறுவனங்கள் நிர்ணயிக்கும் கட்டணங்கள், விமான போக்குவரத்து இயக்குநரகத்தால் (DGCA) கண்காணிக்கப்படும்.
"ஏதேனும் ஒரு அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு கருதினால், பொது நலன் கருதி, எழுத்துப்பூர்வமான உத்தரவு மூலம் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கலாம்" என்று அந்த விதிகள் தெரிவிக்கின்றன.
2027 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரவுள்ள இந்த விதிகள், தற்போது நடைமுறையில் உள்ள 'விமான விதிகள், 1937'-க்கு மாற்றாக அமையும்.
தற்போதைய விதிகளுடன் ஒப்பிடுகையில், புதிய விதிகளில் செய்யப்பட்டுள்ள குறிப்பிட்ட மாற்றங்கள் என்ன என்பது குறித்து உடனடியாக தெரியவரவில்லை.