நாடு முழுவதும் வீட்டு பயன்பாட்டுக்கான 14.2 கிலோ எடையுள்ள எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.29 உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த விலை உயர்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதனைக்கண்டித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், முன்னேறிய நாடுகளில் இந்தியாவில்தான் சமையல் எரிவாயு விலை குறைந்த அளவில் உள்ளதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக பெட்ரோலிய அமைச்சகம் கூறியிருப்பதாவது: சர்வதேச சந்தையின் அடிப்படையில்தான் பெட்ரோலிய பொருட்களின் விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற வளர்ந்த நாடுகளில் உள்ள விலையை விட இந்தியாவில் மிகவும் குறைவு. பிரதம மந்திரி உஜ்வாலா ஜோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகள் ஒரு வீட்டு உபயோக சிலிண்டருக்கு ரூ.642 செலுத்த வேண்டிய நிலையில், சாதாரண நுகர்வோர் ரூ.942 செலுத்துகிறார்கள்.
அதே சமயம் விநியோக செலவு ரூ.1600-க்கும் அதிகமாகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் ஏறபட்டுள்ள நெருக்கடியால் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டே வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.29 உயர்த்தப்பட்டு உள்ளது. எனினும் நுகர்வோருக்கான விலையை தொடர்ந்து அரசு கட்டுப்படுத்தி வருகிறது. சிலிண்டருக்கான அதிக விலை சுமையை அரசாங்கமே ஏற்றுக்கொள்கிறது. சர்வதேச அளவில் விலை உயரும்போது இந்த சுமையை அரசு தாங்கியுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.