டெல்லி, ராஜஸ்தான், பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள மசாஜ் பார்லர்கள் மற்றும் இசைக்குழுக்களில் சிறுமிகள் கட்டாயமாக வேலைக்கு அமர்த்தப்பட்டு, பாலியல் ரீதியாக சுரண்டப்படும் விவகாரம் "மிகவும் தீவிரமான விஷயம்" என்று உச்ச நீதிமன்றம் தெவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2025 மார்ச் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும், பீகார் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள ஆர்கெஸ்ட்ரா குழுக்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் டெல்லி மற்றும் ராஜஸ்தானில் உள்ள மசாஜ் பார்லர்களில் இருந்து டஜன் கணக்கான சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ஜஸ்ட் ரைட்ஸ் ஃபார் சில்ட்ரன் அலையன்ஸ்' என்ற தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த இந்த பொதுநல வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் முன்னிலையில் நேற்று ( மே 25 ) விசாரணைக்கு வந்தது. அப்போது,
“வறுமையில் வாடும் பழங்குடி மற்றும் விளிம்புநிலை குடும்பங்களைச் சேர்ந்த 10 முதல் 16 வயது வரையிலான சிறுமிகள், வேலை மற்றும் திருமண ஆசை காட்டி ஏமாற்றிக் கடத்தப்படுகிறார்கள்.
பல வழக்குகளில், பெற்றோர்கள் வாங்கிய கடனை அடைப்பதற்காக இந்த சிறுமிகள் வெறும் சொற்பமான தொகைக்கு விற்கப்பட்டுகிறார்கள்.
ஆர்கெஸ்ட்ரா, டான்ஸ் பார்கள், மசாஜ் பார்லர்கள் போன்றவை தற்போதைய இடங்களில் இந்த மாதிரியான செயல்கள் ஏதும் இல்லை.
இந்தச் சட்ட ஓட்டைகளைப் பயன்படுத்தி, குழந்தை கடத்தல் மற்றும் பாலியல் சுரண்டல் ஒரு மிகப்பெரிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தொழிலாக உருவெடுத்துள்ளது என்று மூத்த வழக்கறிஞர் எச்.எஸ்.பூல்கா வாதிட்டார்.
இந்த விவகாரம் குழந்தைகளின் அடிப்படை அரசியலமைப்பு உரிமைகளை அப்பட்டமாக மீறுவதாகும் என்று கூறிய நீதிபதிகள், இதுகுறித்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.