டெல்லியில் சிறுகதை ஆசிரியராக மாதத்திற்கு சுமார் 1 லட்சத்திற்கும் மேல் சம்பளம் வாங்கி வந்த 21 வயது பெண் ஒருவர், தனது வேலையை விட்டுவிட்டு ஒரு உணவகம் திறந்த நிலையில், தற்போது கடுமையான நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள பெண் ஒருவர் 17 வயதில் இருந்தே சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். இவர் சிறுகதை ஆசிரியராக ஒப்பந்த அடிப்படையில் (comic freelancer) பணிபுரிந்து வந்துள்ளார்.
ஆண்டுக்கு சுமார் 15 லட்சம் வரை கார்ப்பரேட் நிறுவனத்தில் சம்பளம் வாங்கி வந்துள்ளார்.
இதையடுத்து இவர் தனது சேமிப்பில் இருந்து சொந்தமாக ஒரு தொழிலை தொடங்க முடிவு செய்தார். இதைத்தொடர்ந்து டெல்லி ஹட்சன் லேனில் ஒரு கஃபே கடையை தொடங்கினார்.
இந்த நிறுவனம் தொடங்கி தற்போது ஓராண்டு நிறைவு செய்துள்ள நிலையில், தனது சேமிப்பு முழுவதுமாக செலவழிந்து, தனது நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருவதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் தனது உணவகத்தில் உணவு தரமாகவும், சுவையாகவும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் உணவகத்தில் சில வசதி குறைபாடு உள்ளதால் அது நஷ்டத்தில் இயங்குவதாகவும், அதை சரி செய்வதற்கு தற்போது பணம் எதுவும் இல்லை எனவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் இவர் பதிவிட்ட கருத்து இணையத்தில் பயனர்களிடம் இருந்து பல்வேறு ஆலோசனைகளை பெற்றுள்ளது.
இந்த பதிவிற்கு பயனர் ஒருவர், “நான் அந்த பகுதியிலிருந்து 2 நிமிடத் தொலைவில் வசிக்கிறேன், அங்குள்ள பெரும்பாலான காபி கடைகளுக்கு சென்று பார்த்திருக்கிறேன்.
உங்கள் சிறப்பு காபி என்றால், அது பெயரிலோ அல்லது வெளியிலுள்ள தோற்றத்திலோ அவ்வளவாகத் தெரிவதில்லை.
உள்ளே சென்று எதையாவது முயற்சித்து பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு ஒருபோதும் ஏற்பட்டதில்லை.
மிகவும் நெரிசலான சந்தையில் மற்றுமொரு கடையாக இருப்பதைத் தவிர, நீங்கள் வேறு என்ன விற்கிறீர்கள் என்பது கூடத் தெளிவாகத் தெரியவில்லை” என்று பதிவிட்டார்.
இதையடுத்து மற்றொரு நபர், “கஃபேவில் நீங்கள் விற்பனை செய்யும் காபியின் விலை, அதன் தரத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இல்லையென்றால் அது ஹட்சன் லேனில் உள்ள மற்றுமொரு கஃபேவாக மட்டுமே இருக்கும்.
ஏற்கெனவே ஒரு வருடம் ஆகிவிட்டதால், நீங்கள் அடிப்படைகளைக் கண்டறிந்திருப்பீர்கள் என்று நான் கருதுகிறேன்?” என அவர் குறிப்பிட்டுள்ளார்.