தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் போன்ற எரிவாயுக்களை பெட்ரோல் நிலையங்களில் இருந்து மொத்தமாக வாங்குவதற்கு மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
இதுகுறித்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அரசாணையில், “விலை வித்தியாசத்தின் காரணமாக நிறுவனங்கள் மொத்தமாக பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் வாங்க தொடங்கியதால், சில பகுதிகளில் டீசலுக்கான தேவை அதிகரித்துள்ளது.
டெல்லி பெட்ரோல் நிலையங்களில் ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.95.20 ஆக இருக்கும் நிலையில், மொத்த விற்பனையில் அதன் விலை ரூ.134.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 90 நாட்கள் வரை இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.
இதில், சில்லறை விற்பனை நிலையங்களில் டீசல் விற்பனையானது வாகன எரிபொருள் தொட்டிகள் அல்லது பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கலன்களில் மட்டுமே நடைபெற வேண்டும்.
ஒரு வாடிக்கையாளர் அல்லது ஒரு வாகனத்திற்கு ஒரு நாளைக்கு 200 லிட்டர் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும். அவ்வாறு வாங்கப்பட்ட டீசலை மறுவிற்பனை செய்யக் கூடாது” என்றும் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.