இந்தியா

கெட்டுப்போன பரோட்டா, அழுகிய முட்டை விற்பனை - ‘ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்’ நிறுவனத்திற்கு FSSAI நோட்டீஸ்

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தை மீறுவதாக உணவு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்தது.

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்-ற்கு உணவு பாதுகாப்புத் துறை நோட்டீஸ்:

ஆன்லைன் உணவு விற்பனை தளமான ‘ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்’ குறித்து இணையத்தில் வந்த புகார்களை தொடர்ந்து, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், அந்நிறுவனத்திற்கு 9 நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது.

இந்த புகார்களில் சில உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் (2006)-ஐ மீறுவதாக இருந்ததாக உணவு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்தது.

ஸ்விக்கி குறித்து இணையதளத்தில் வந்த புகார்களை இந்திய உணவு பாதுகாப்பு துறை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அந்த புகாரில், ‘ஹெல்திஃபை 100% வே புரோட்டீன் 1 கிலோ' மற்றும் ‘நாய்ஸ் ஹோம்ஸ்டைல் ​​மெட்ராஸ் மிக்சர்' போன்ற தின்பண்டங்கள், அவற்றின் விநியோகத் தேதி கடந்த பிறகு வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதேபோன்று வாடிக்கையாளர் ஒருவருக்கு காலாவதியான, அழுகிய மற்றும் துர்நாற்றம் வீசும் ‘அக்ஷயகல்ப ஆர்கானிக் முட்டை' ஒன்று விநியோகிக்கப்பட்டது.

மற்றொரு வாடிக்கையாளர் ‘காக்கே டா பரோட்டா' கெட்டுப்போய், துர்நாற்றம் வீசியதால் உண்ணத் தகுதியற்றதாக இருந்ததாக புகார் அளித்தார்.

இதையடுத்து மின்னணு வர்த்தக போக்குவரத்தின் பெரும்பகுதி, விற்பனை மையங்களில் உள்ள மனிதர்களால் அல்லாமல், ‘பாட்ஸ்’ எனப்படும் தானியங்கி செயலிகள் மூலமாகவே கையாளப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஸ்விக்கி நிறுவனத்திற்கு எச்சரிக்கை:

இந்நிலையில் உணவு வணிக நிறுவனம் ஒரு விரிவான விளக்கம் மற்றும் இணக்க அறிக்கையை சமர்ப்பிக்குமாறும், இதை செய்யத் தவறினால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.