கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறியிருக்கும் நிலையில், காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பல குறைபாடுகள் உள்ளன. அதனால் நான் குறிப்பிட்டு அவற்றை மட்டுமே சார்ந்திருக்க விரும்பவில்லை; ஆயினும், அந்தக் கணிப்புகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று இணக்கமாக இருக்கிறது.
இது ஒரு ஏகோபித்த முடிவாக அமைந்துள்ளது. ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் நான் உரையாடிய அனைத்து நிபுணர்கள், பத்திரிகையாளர்கள், தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர்கள் என அனைவரும், இத்தேர்தலில் 'UDF' கூட்டணிதான் வெற்றிபெறும் என தெரிவித்துள்ளனர்.
எனவே, அத்தகையதொரு வெற்றி அமையாமல் போனால், அது மிகவும் அதிர்ச்சியளிக்கும் ஒரு முடிவாக இருக்கும். ஆகையால், நாளை காலை என்ன நிகழப்போகிறது என்பதை அறியவே நாம் இங்கு கூடியிருக்கிறோம். ஆனால் நாளை காலைக்குள் எங்களுக்குச் சாதகமான ஒரு தெளிவான மற்றும் உறுதியான முடிவு கிடைத்துவிடும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
இருப்பினும் நாளை வெளிவரப்போகும் முடிவுகளில் மிக முக்கியமான செய்தி என்னவென்றால் நாட்டின் எந்தப் பகுதியிலும் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருக்காது என்பதுதான். நாங்கள் 2011-ல் வெற்றி பெற்றபோது, கேரளா மற்றும் வங்காளம் இரண்டையும் இழந்தது. ஆனால் திரிபுராவில் ஆட்சியில் இருந்தது. ஆனால் இம்முறையும் எந்தப் பகுதியிலும் ஆட்சியில் இருக்கமாட்டார்கள். அது நமது நாட்டின் ஒரு முக்கிய வளர்ச்சியாக இருக்கும்.” என தெரிவித்தார்.
140 தொகுதிகளை கொண்ட கேரள சட்டசபைக்கு ஏப்.9ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 78.27 சதவீத வாக்குகள் பதிவாகின. 2021 தேர்தலில் எல்.டி.எஃப் கூட்டணி 99 தொகுதிகளை கைப்பற்றி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற மாநிலத்தின் வழக்கத்தை முறியடித்து, தொடர் வெற்றியைப் பெற்றது. பினராயி விஜயன் மீண்டும் முதலமைச்சரானார்.
இந்நிலையில் இம்முறை காங்கிரஸ் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு, அசாம், மேற்குவங்கம், புதுச்சேரியோடு நாளை கேரளாவிற்கு தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன.