கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சற்று முன்பு, ஒரு நரி ஓடுபாதைக்குள் நுழைந்ததால் இண்டிகோ விமானம் ஒன்று திசை திருப்பப்பட்டது. சென்னையில் இருந்து வந்த அந்த விமானத்தின் விமானி, ஓடுபாதையில் ஒரு நரியை கண்டதும் உடனடியாக வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
விமானம் தரையிறங்குவதற்கு முன்பு மீண்டும் மேலே செல்லுமாறு வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் (ATC) உத்தரவிட்டது. அதை தொடர்ந்து, அந்த விமானம் துர்காபூரில் உள்ள ஆண்டாள் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
இன்று (புதன்கிழமை) காலை கொல்கத்தா விமான நிலையத்தில், மும்பை நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானம் ஒன்றுக்கு கடத்தல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியான சில மணி நேரங்களை தொடர்ந்து, இங்கு பீதி நிலவுகிறது.
விமானத்தின் கழிவறைகளில் ஒன்றின் கண்ணாடியில், விமான கடத்தல் தொடர்பான மிரட்டல் செய்தி ஒன்று எழுதப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் அந்த மிரட்டல் ஒரு பொய்யானது என தெரியவந்தது.
கழிப்பறைக் கண்ணாடியில் மிரட்டல் செய்தி ஒன்று எழுதப்பட்டிருந்ததைக் கண்டறிந்ததை அடுத்து, புறப்படத் தயாராகிக்கொண்டிருந்த விமானம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துத் தகவல் கிடைத்ததும், விமானப் பணியாளர்கள் உடனடியாக வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தை (ATC) எச்சரித்தனர்.
மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையும் (சிஐஎஸ்எஃப்) சிறப்பு பாதுகாப்பு பணியாளர்களும், வழக்கமான பாதுகாப்பு நெறிமுறைகளின் ஒரு பகுதியாக, அனைத்துப் பெட்டிகளையும் மற்றும் சாமான்கள் வைக்கும் இடங்களையும் சல்லடை போட்டுத் தேடி, ஒரு விரிவான சோதனை நடவடிக்கையைத் தொடங்கினர்.
மிரட்டல் செய்தியை எழுதியது யார் என்பதைக் கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டது. முதலில் காலை 10:30 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்த விமானம், மாலை 5:00 மணிக்கு புறப்படும்படி மாற்றியமைக்கப்பட்டது.