இந்தியா

12 நாட்களுக்கு பின் தகனம் செய்யப்பட்டது முன்னாள் புனே அழகி த்விஷா சர்மா உடல்!

கடந்தாண்டு டிசம்பரில்தான் திருமணம் நடைபெற்றது.

முன்னாள் மிஸ் புனே அழகியான த்விஷா சர்மாவின் உடல், 12 நாட்களுக்குப் பிறகு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு இன்று தகனம் செய்யப்பட்டது.

மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையால் இரண்டாவது முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டநிலையில் இன்று தகனம் செய்யப்பட்டது.

போபாலில் நடத்தப்பட்ட முதல் பிரேதப் பரிசோதனையின்போது பல விஷயங்கள் முறையாக ஆராயப்படவில்லை என்று கூறி, த்விஷா சர்மாவின் குடும்பத்தினர் மறுபரிசோதனை நடத்தக் கோரியிருந்தனர்.

33 வயதான த்விஷா சர்மா, கடந்த 12ம் தேதி அன்று போபாலில் உள்ள தனது கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இவருக்கும், சமர்த் சிங் என்ற வழக்கறிஞருக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.

த்விஷாவின் மரணத்திற்கு வரதட்சணை கொடுமை, உடல் மற்றும் மன ரீதியான சித்திரவதைகளே காரணம் என அவரது பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். அதே சமயம், த்விஷா போதை பழக்கங்களுக்கு அடிமையாகி இருந்ததாக அவரது கணவர்வீட்டார் குற்றம் சாட்டுகின்றனர்.

த்விஷாவின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், சமர்த் சிங், த்விஷாவின் மாமியரான ஓய்வுபெற்ற நீதிபதி கிரிபாலா சிங் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 10 நாட்களாகத் தலைமறைவாக இருந்த சமர்த் சிங், வெள்ளிக்கிழமை ஜபல்பூரில் கைது செய்யப்பட்டார். பின்னர், போபால் நீதிமன்றம் அவரை ஏழு நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டது.

இன்று நடைபெற்ற இறுதி சடங்குகளில் இருவரும் பங்கேற்கவில்லை.