நான், என்னுடைய மகள் (வீணா) மற்றும் குடும்பத்தினர் எந்தவொரு ஹவாலா டீலிங்கில் (பண பரிவர்த்தனை) ஈடுபடவில்லை என்று கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியதாவது:-
நானோ, எனது மகளோ, என்னுடைய குடும்பத்தினரோ எந்தவொரு ஹவாலா பரிவர்த்தனையில் ஈடுபடவில்லை. இதில் நான் முழுமையாக உறுதியாக இருக்கிறேன். இந்த கைகள் தூய்மையானவை. எப்போதும் தூய்மையாக இருக்கும்.
வீணா என்னுடைய மகள் என்பதனால் ஏராளமான விசயங்கள் எழுப்பப்பட்டன. ஏராளமான சொத்துகளுக்கு வீணா உரிமையாளர் கிடையாது. பேசப்படும் பணத்தின் அளவும் பெரியதல்ல.
இந்த விவகாரத்தில் ஒரு செய்தி குறிப்பு (press release) வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் எனது பெயர் பி. விஜயன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் முன்னாள் முதலமைச்சர் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. அவ்வாறு குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன?.
வீணா பணத்தை முகமது ரியாஸின் கணக்கிற்கு மாற்றினார் என்ற செய்தி எந்த ஆதாரத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டது? பினராயி விஜயனுக்கு எதிராக இருந்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று அவர்கள் நினைக்கிறார்களா?
வீணா விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்துள்ளார். எதிர்காலத்திலும் அந்த அமைப்பிற்கு தகவல்களை வழங்குவதில் அவருக்கு எந்தத் தயக்கமும் இருக்காது.
இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.
அமலாக்கத் துறையின் (ED) இந்த பணமோசடி வழக்கு, கேரளாவைச் சேர்ந்த சுரங்க நிறுவனமான கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூடைல் லிமிடெட் (CMRL) மற்றும் வீணா என்பவரால் தொடங்கப்பட்டு தற்போது செயல்பாட்டில் இல்லாத எக்ஸாலஜிக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் தொடர்பானது. எந்தவொரு சேவையையும் பெறாமலேயே, எக்ஸாலஜிக்' நிறுவனத்திற்கு CMRL நிறுவனம் ரூ. 2.78 கோடியை வழங்கியது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெறுகிறது.
துபாய்க்கு மேற்கொள்ளப்பட்ட சில நிதிப் பரிமாற்றங்கள் குறித்த விவரங்கள் அடங்கியதாகக் கூறப்படும் கையெழுத்துப் பிரதிகள், கடந்த மே மாதம் வீணாவின் (Veena) வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை (ED) ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு பனராயி விஜயன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விசாரணையின் ஒரு பகுதியாக, வீணா மற்றும் CMRL வாரிய உறுப்பினர்களிடம் அந்த அமைப்பு அண்மையில் பலமுறை விசாரணை நடத்தியுள்ளது.