ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் நாதெண்ட்லா பாஸ்கர ராவ் உடல்நலக் குறைவால் (90) இன்று காலமானார். வயது மூப்பு காரணத்தினால் எழுந்த உடல் உபாதைகளுக்கு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார்.
பாஸ்கர ராவ் முதலமைச்சர் எம்.சென்னா செட்டியின் அமைச்சரவையில் பணியாற்றியவர். பின்னர், 1982-ல் தெலுங்கு தேசம் கட்சி உருவாவதில் முக்கியப் பங்காற்றிய இவர், அக்கட்சியின் இணை நிறுவனர்களில் ஒருவராகவும், என்.டி.ராமராவின் வழிகாட்டியாகவும் செயல்பட்டார்.
1983 சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றிப்பெற என்.டி.ஆரின் அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பணியாற்றினார். ஆனால் அடுத்தாண்டே என்.டி.ஆர் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல, அவருக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிக்குள் இருந்த ஒரு பிரிவின் ஆதரவை தன்பக்கம் இழுத்தார்.
தொடர்ந்து அப்போதைய ஆளுநர் ராம் லால் உதவியுடன் என்.டி.ஆரின் ஆட்சி கலைக்கப்பட்டு, பாஸ்கர ராவ் முதலமைச்சராகப் பதவியேற்றார். இதனிடையே என்.டி.ஆர். அமெரிக்காவில் இருந்து திரும்பியபின் நாடு தழுவிய அளவில் "ஜனநாயகத்தைக் காப்போம்" என்ற போராட்டத்தை தொடங்கினார். இதற்கு பல எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்தன.
தமக்கு ஆதரவான 161 எம்.எல்.ஏ-க்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று ஜனாதிபதி முன் நிறுத்தி தனது பலத்தை நிரூபித்தார். இதனைத்தொடர்ந்து மத்திய அரசு இதில் தலையிட்டு, ஆளுநரை திரும்பப் பெற்றது.
மேலும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் 31 நாட்களில் பாஸ்கர் ராவ் பதவி இழக்க, என்டிஆர் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். பின்னர் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பாஸ்கர ராவ், தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இதனைத்தொடர்ந்து 2019 ஜூலை மாதம் ஹைதராபாத் அருகே நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். தற்போது இவரது மகன் நாதெண்டலா மனோகர் தற்போதைய ஆந்திர அமைச்சரவையில் அமைச்சராக உள்ளார்.