ரஷ்யா மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 41 பேரிடம் சுமார் 40 லட்சம் ரூபாய் வரை பண மோசடி செய்த வழக்கில், முக்கிய குற்றவாளியான ஏஜென்சி உரிமையாளரை டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் மகாராஷ்டிராவில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
டெல்லி லக்ஷ்மி நகர் பகுதியில் உள்ள ஜவஹர் பூங்காவில் 'M/s SS Overseas Travels Agency' என்ற பெயரில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகம் ஒன்றை சாந்தாராம் பார்கு ஷெல்கே என்பவர் நடத்தி வந்துள்ளார்.
தனது நிறுவனத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் இருப்பது போல் காட்டுவதற்காக, ஜிஎஸ்டி பதிவையும் அவர் பெற்றிருந்தார்.
சமூக வலைதளங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறித்து வந்த விளம்பரங்களைப் பார்த்து, தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 41 இளைஞர்கள் இவரை அணுகியுள்ளனர்.
விசா மற்றும் இதர ஆவணங்களைச் சரிசெய்வதற்காக இவர்களிடம் தலா பெருந்தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
பணத்தைப் பெற்றுக் கொண்ட சாந்தாராம், அவர்களுக்கு போலியாகத் தயாரிக்கப்பட்ட வேலைவாய்ப்பு கடிதங்கள், விசா மற்றும் விமான டிக்கெட்டுகளை வழங்கியுள்ளார்.
இளைஞர்கள் வெளிநாடு செல்வதற்காக விமான நிலையம் சென்றபோதுதான், தங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் போலி என்பது தெரியவந்து அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து விளக்கமறிய ஏஜென்சியைத் தொடர்பு கொள்ள முயன்றபோது, சாந்தாராம் தனது மொபைல் போன்களை அணைத்துவிட்டு, அலுவலகத்தைப் பூட்டிவிட்டுத் தலைமறைவாகியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், பாதிக்கப்பட்ட இளைஞர்களிடமிருந்து பெறப்பட்ட லட்சக்கணக்கான ரூபாய் பணம் அந்த நிறுவனத்தின் வங்கிச் கணக்கிலும், சாந்தாராமின் தனிப்பட்ட கணக்கிலும் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.
டெல்லி, உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட் எனப் பல மாநிலங்களில் போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தியும், சாந்தாராம் தனது இருப்பிடங்களை அடிக்கடி மாற்றி போலீஸாருக்குப் போக்கு காட்டி வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் கைது வாரண்ட் பெறப்பட்டது.
இறுதியாக, தொழில்நுட்ப மற்றும் வங்கிப் பரிவர்த்தனை ஆதாரங்களை கொண்டு அவர் மகாராஷ்டிர மாநிலம் பால்ஹர் மாவட்டத்தில் உள்ள நாலசோபரா பகுதியில் பதுங்கியிருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர்.
அங்கு விரைந்த டெல்லி போலீஸ் தனிப்படை, சாந்தாராமை அதிரடியாகக் கைது செய்து டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்துள்ளனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய அவரது கூட்டாளியான ஆசிப் என்பவரைப் போலீஸார் தேடி வருகின்றனர். மேலும், கைது செய்யப்பட்டுள்ள சாந்தாராமிற்கு வேறு ஏதேனும் குற்றப் பின்னணி உள்ளதா என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.