மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் வெடித்தாலும், சுமார் 91.66% பேர் வாக்களித்துள்ளனர். முதற்கட்ட வாக்குப்பதிவில் சுமார் 93.19% வாக்குகள் பதிவாகி இருந்தன.
இந்நிலையில் இரண்டு கட்டங்களையும் சேர்த்து இத்தேர்தலில் மேற்குவங்கத்தில் மொத்தமாக 92.47% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு மேற்குவங்கத்தில் பதிவான அதிக வாக்குகள் இது என தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கடந்த 2011-ல்தான் 84.72% வாக்குகள் பதிவாகி இருந்தது.
மொத்தமாக 294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்கத்திற்கு முதற்கட்டமாக கடந்த 23ஆம் தேதி 152 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. மேற்குவங்கம் உட்பட 5 மாநிலங்களுக்கு மே.4ம் தேதி முடிவுகள் வெளியாக உள்ளன.