இந்தியா

உத்தரகாண்ட் விபத்து எதிரொலி: ஹெலிகாப்டர்களில் இனி 2 விமானிகள் கட்டாயம் - டிஜிசிஏ உத்தரவு!

இந்த விதிகள் நாளைமுதல் அமலுக்கு வரும் என டிஜிசிஏ தெரிவித்துள்ளது.

உத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்தைத் தொடர்ந்து, சார் தாம் யாத்திரை வழித்தடங்களில் இயக்கப்படும் அனைத்து சார்ட்டர் ஹெலிகாப்டர்களிலும் இனி இரண்டு விமானிகள் கட்டாயம் இருக்கவேண்டும் என சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு விமானப் பயணத்திற்கும் சேருமிடம் மற்றும் வழித்தட அனுமதிகளை முன்கூட்டியே பெற வேண்டும் என்றும் உத்தரகாண்ட் சிவில் ஏவியேஷன் டெவலப்மென்ட் அத்தாரிட்டியுடன் இணைந்து உத்தரவை வெளியிட்டுள்ளது.

துணை விமானியும் மலைப்பாதைகளில் விமானத்தை இயக்குவதற்கான தகுதி பெற்றவராக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு ஹெலிகாப்டரும் தரையிறங்கியவுடன், அந்த வழித்தடத்தின் வானிலை நிலவரம் மற்றும் செயல்பாட்டுத் தகவல்களை விமானிகள் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். இது அடுத்து பறக்கவிருக்கும் மற்ற விமானிகளுக்கு வானிலை பற்றி முன்கூட்டியே தெரியப்படுத்த உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிகள் நாளைமுதல் (நவ.2) அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் நிறுவனங்கள் எதிர்ப்பு

இந்த திடீர் உத்தரவு காரணமாகப் கூடுதல் செலவுகள் ஏற்படுவதோடு, தற்போதைய கட்டண அமைப்பில் இந்த விதியை அமல்படுத்துவது வணிக ரீதியாகச் சாத்தியமில்லை என்று கூறி, 11 ஹெலிகாப்டர் சேவை நிறுவனங்கள் நவம்பர் 2 முதல் தங்களது சேவைகளை தற்காலிகமாக நிறுத்தப் போவதாக எச்சரித்துள்ளன.

SCROLL FOR NEXT