நாகலாந்து மற்றும் அசாமில் கடந்த மாதம் 2-வது வாரத்தில் கனமழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளத்தில் 53 வயதான பெண் யானை (ஜோய்மோதி) அடித்துச் செல்லப்பட்டது. நாகலாந்து அதிகாரிகள் உள்ளூர் மக்கள் உதவியுடன் இந்த யானையை மீட்டனர்.
ஆனால் யானையின் உடம்பில் பெரும்பாலான இடங்களில் காயம் ஏற்பட்டிருந்தது. ஒரு கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டு கண்ணீர் வடிந்த வண்ணம் உள்ளது. உள்ளூர் பகுதியில் கால்நடை மருத்துவர்கள் காயங்களுக்கு மருந்து வைத்து கட்டினார்கள். என்றாலும், நீண்ட நேரம் நிற்க முடியாமல் ஜோய்மோதி அவதிப்பட்டது. மேலும், சரியாக உணவு சாப்பிட முடியாமல் கஷ்டப்பட்டது.
இதனால் குஜராத் மாநிலம் ஜாம் நகரில் உள்ள அம்பானியின் வந்தாராவுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. சாலை வழியாக கொண்டு செல்லப்பட்டால் நீண்ட நேரம் ஆகும் என்பதால் வான்வழியாக வந்தாரா கொண்டு செல்லப்பட்டுள்ளது.
வந்தாரா ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஆனந்த் அம்பானி மூலம் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் தொடங்கப்பட்ட ஒரு பெரிய வனவிலங்கு பாதுகாப்பு, மீட்பு மற்றும் மறுவாழ்வு மையமாகும். காயம்பட்ட, துஷ்பிரயோகம் செய்யப்பட்ட மற்றும் ஆபத்தில் உள்ள விலங்குகளுக்கு இது அடைக்கலம் அளிக்கிறது.
வனவிலங்குகளுக்கான அவசர சிகிச்சையில் உள்ளூர் திறனை வலுப்படுத்தும் நோக்கில், அசாமில் மூன்று வனவிலங்கு கால்நடை மருத்துவப் பராமரிப்பு மையங்களை (அதில் ஒன்று யானைகளுக்கென பிரத்யேகமாக அமைக்கப்படவுள்ளது) நிறுவ 'வந்தாரா' (Vantara) முன்மொழிந்துள்ளது. இத்திட்டத்தின்படி, இந்த மையங்கள் அந்தந்த விலங்கினங்களுக்கு ஏற்ற உள்கட்டமைப்பு மற்றும் கால்நடை மருத்துவ வசதிகளைக் கொண்டிருக்கும்; மேலும் இவை அசாம் வனத்துறையால் தன்னாட்சி முறையில் இயக்கப்படும்.
அசாமில் உள்ள யானைகள் மற்றும் பிற வனவிலங்குகளுக்கு, அவசரநிலை ஏற்படும் இடங்களுக்கு அருகிலேயே சிறப்பு மருத்துவ சிகிச்சையை வழங்குவதே இம்மையங்களை அமைப்பதன் நோக்கமாகும்; இதன் மூலம் விலங்குகளை நீண்ட தூரம் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் குறையும்.