குஜராத்தில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் ஒரு பிரிவின் மூலம் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டதாக ஐந்து பேரை, குஜராத் பயங்கரவாத தடுப்புப் படை (ATS) கைது செய்தது.
குஜராத்தில் அகமதாபாத் மற்றும் சித்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பிலால் அபித் ஷேரா, முகமது அய்யூப் கடிவாலா, முகமது ஷஃபி முகி, முகமது ஹசன் கரடியா மற்றும் முகமது அய்யூப் சுனசரா ஆகிய ஐந்து பேர்களை சந்தேகத்தின் பேரில் ஏடிஎஸ் அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களில் சிலர் மதராஸாவில் படித்து வந்துள்ளனர்.
இவர்களில் குறைந்தது இருவராவது ஏகே-47 ரக துப்பாக்கிகளை கையாளுவதற்கான பயிற்சியை பெறுவதற்காக காஷ்மீருக்கு பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் இவர்கள் வெடிகுண்டுகள் மற்றும் நச்சுவாயு தயாரிக்க கற்றுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் சதி வேலைக்கு திட்டமிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு, சதிதிட்டம் முறியடிக்கப்பட்டது. தற்போது கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அந்த 8 பேருடன் நெருக்கமாக செயல்பட்டு வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
2023 முதல் 2026 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், சந்தேக நபர்கள் வெவ்வேறு இடங்களில் டைமர் (timer) செயல்முறையை பயன்படுத்தி வெடிகுண்டு முறைகளை ஆராய்ந்து, அவற்றை செயல்படுத்த தீவிரமாக முயன்றதாகவும் ஏடிஎஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் கொடி, பயங்கரவாதி மசூத் அசார் எழுதிய புத்தகங்களின் முழு அச்சுப் பிரதி மற்றும் பாகிஸ்தான் பயங்கரவாதியால் நிதியளிக்கப்பட்டதாக கூறப்படும் ரூ.1.30 லட்சம் பணத்தையும் போலீசார் மீட்டனர்.
மேலும் இதுகுறித்து காவல்துறை துணை இன்ஸ்பெக்டர் சுனில் ஜோஷி கூறுகையில், “ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் நிறுவனரான மசூத் அசாரின் புத்தகங்கள் மற்றும் பேச்சுகளாலும், இவர்கள் ஈர்க்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் புத்தகத்தின் உள்ளடக்கத்தை படித்துவிட்டு, மற்ற மதராஸா மாணவர்களையும் அமைப்பில் சேருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்” என்று கூறினார்.