இந்தியா

இந்தியாவின் முதல் புல்லட் ரெயிலின் 'ஃபர்ஸ்ட் லுக்'

மும்பை- அகமதாபாத் இடையில் புல்லட் ரெயில் சேவை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுடெல்லியில் உள்ள ரெயில்வே அமைச்சகத்தின் தலைமையகத்தில் புல்லட் ரெயிலின் மாதிரி புகைப்படத்தை இந்திய ரெயில்வே துறை தனது அதிகாரப்பூர்வத் தகவல் மற்றும் செய்தித் தொடர்பாளர்கள் மூலம் ஊடகங்களுக்குத் தெரிவித்தது.

பா.ஜ.க மகளரணி தேசியத் தலைவரும், தமிழகத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.-வுமான வானதி சீனிவாசன் உட்பட பல முக்கியப் பிரமுகர்கள் மற்றும் தேசிய ஊடகங்கள் இந்தச் செய்தியையும் அதன் புகைப்படங்களையும் பொதுமக்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

ரெயில்வே துறையிடமிருந்து கிடைத்த தகவலின்படி, புல்லட் ரெயில் 508 கிலோ மீட்டர் நீளமுள்ள அதிவேக ரெயில் பாதையில் மணிக்கு 320 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும்.

மேலும் 8 பெட்டிகளைக் கொண்டு இந்த ரெயிலில் அதிவேக செயல்திறனுடன் சேர்த்து, பயணிகளின் வசதி மற்றும் சொகுசான பயணத்தை மையமாக வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் ஆகஸ்ட் 15, 2027-க்குள் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை- அகமதாபாத் அதிவேக ரெயில் பாதையில் சபர்மதி, அகமதாபாத், ஆனந்த், வதோதரா, பருச், சூரத், பிலிமோரா, வாபி, போய்சர், விரார், தானே மற்றும் மும்பை உட்பட மொத்தம் 12 நிலையங்களில் நின்று தோராயமாக 2 மணி நேரத்தில் மும்பையிலிருந்து அகமதாபாத் வந்து சேரும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

மும்பையில் கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைப்பதற்காக, 350 டன் எடையுள்ள ஒரு மிகப்பெரிய ராட்சத இயந்திரத்தின் முன் பகுதியை வெற்றிகரமாக நிலத்திற்கு அடியில் இறக்கியுள்ளனர். இதன் மூலம் மும்பை பகுதிக்கான சுரங்கம் தோண்டும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என தேசிய அதிவேக ரெயில் கார்ப்பரேஷன் லிமிடெட் தெரிவித்துள்ளது.

இதற்கான பெருமுயற்சிகளை மேற்கொண்டு இந்திய ரெயில்வே துறையை உலகத்தரத்தில் உயர்த்தி வரும் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், ரெயில்வே அமைச்சகத்திற்கும் பலர் நன்றிகளை தெரிவித்து பாராட்டினார்.