இந்தியா

கொச்சி அருகே எண்ணெய் நிறுவனத்தில் தீ விபத்து - தொழிலாளி உயிரிழப்பு

எலூர் மற்றும் ஆலுவா நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

மாலை மலர்

திருவனந்தபுரம்:

கேரளம் மாநிலம் கொச்சி அருகே உள்ள பாதாளம் இடையார் தொழிற்பேட்டையில் ஆயில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இன்று காலை ஆலையில் பணி நடைபெற்றபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. எண்ணெய் இருந்த சேமிப்பு தொட்டியில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தீ வேகமாக எரிந்தது. இது பற்றிய தகவல் கிடைத்ததும் எலூர் மற்றும் ஆலுவா நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. சுமார் 7 வாகனங்கள் போராடி தீயை அணைத்தன. இந்த தீ விபத்தில் அங்கு வேலைபார்த்த பீகாரைச் சேர்ந்த சுத்ரு முக்யா (வயது 45) பரிதாபமாக இறந்தார். மேலும் சிலர் காயம் அடைந்தனர்.