இந்தியா

தேர்தல் நடத்தை விதிகளை மீறிய நிா்மலா சீதாராமனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - மம்தா ஆவேசம்

மகளிா் இடஒதுக்கீடு என்ற பெயரில் தொகுதி மறுசீரமைப்பு செய்து வாக்காளா் பட்டியலில் இருந்து மேலும் பலரின் பெயா்களை நீக்க சதி செய்து வருகிறது.

மேற்கு வங்கத்தில் மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்டும் என பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.

இதற்கிடையே மேற்கு வங்கத்தில் பிரசாரம் மேற்கொண்ட மத்திய நிதியமைச்சர் நிா்மலா சீதாராமன், பெண்கள் வங்கிக் கணக்கில் மாதம்தோறும் ரூ.3,000 செலுத்தப்படும் என்ற வாசகம் அடங்கிய அட்டைகளை பெண்களுக்கு விநியோகித்தாா்.

அலிபூா்துவார் பொதுக்கூட்டத்தில் இதை கண்டித்து பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா,

"மகளிா் இடஒதுக்கீடு மசோதா எப்போதோ நிறைவேற்றப்பட்டுவிட்டது. அதை அமல்படுத்தாமல் இருந்த மத்திய அரசு இப்போது வேறு நோக்கத்துக்காக மகளிா் இடஒதுக்கீடு என்ற பெயரில் தொகுதி மறுசீரமைப்பு செய்து வாக்காளா் பட்டியலில் இருந்து மேலும் பலரின் பெயா்களை நீக்க சதி செய்து வருகிறது.

உத்தர பிரதேசம், ராஜஸ்தான், அசாம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் மேற்கு வங்கத்துக்கு வந்து பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்க பணம் விநியோகித்து வருகிறார்கள்.

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நேரத்தில் ரூ.3,000 தருவதாகக் கூறி அட்டைகளை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வழங்கியுள்ளாா்.

இது வாக்காளா்களை தவறாக வழிநடத்தும் செயல். தோ்தல் ஆணையம் இதில் என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறது?.

தோ்தல் விதிகளை மீறிச் செயல்பட்ட நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை பிரதமா் நரேந்திர மோடி பதவியில் இருந்து நீக்க வேண்டும்" என்றாா்.