இந்திய ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்த பாப்பல் சிங், பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்ததை தொடர்ந்து, அவரின் மகள் திருமணத்தில் 16 ராணுவ வீரர்கள் கலந்துகொண்டு சகோதரர்களை போன்று திருமணம் நடத்தி வைத்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தை அடுத்த ஹர்சோலி கிராமத்தை சேர்ந்த பாப்பல் சிங், இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார்.
இந்த சூழலில் இவரின் மகளான பிரீத்திக்கு கடந்த மாதம் திருமணம் நிச்சயமாகி இருந்தபோது, அவரின் தந்தை பாப்பல் சிங் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்தார்.
இதையடுத்து உயிரிழந்த ராணுவ வீரரின் படைப்பிரிவை சேர்ந்த 16 வீரர்கள், தங்களுடன் பணியாற்றிய சிங்கின் மகளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து ராஜஸ்தானில் கடந்த சனிக்கிழமை நடந்த திருமணத்தில் உயிரிழந்த சிங்கின் படைப்பிரிவை சேர்ந்த 16 வீரர்களும் ராணுவ உடையில் கலந்துகொண்டனர்.
மேலும் மணப்பெண்ணின் சகோதரர்களை போன்று, திருமணத்தில் கலந்துகொண்டு ராணுவ வீரர்கள் சம்பிரதாயங்களை செய்தனர்.
இதையடுத்து ராணுவ படைப்பிரிவு அதிகாரி ரோஷ்னி தவால், மணப்பெண்ணின் தாயாருக்கு சால்வை ஒன்றை போர்த்தி மரியாதை செய்தார்.
இந்த நிகழ்வு, அங்கிருந்த குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், கிராமவாசிகளையும் நெகிழச் செய்தது.
இதைத்தொடர்ந்து உயிரிழந்த ராணுவ வீரருடன் பணியாற்றிய படைப்பிரிவு அதிகாரிகள், திருமண செலவுகளுக்காக ரூபாய் 1.61 லட்சம் பணத்தை மணப்பெண்ணிடம் வழங்கினர்.
ராணுவ வீரர்களின் இந்த செயல், தன்னலமற்ற சேவையை உயிர்ப்பித்ததுடன், வீரர்களில் ஒருவர் உயிரிழந்தாலும், அவர்களின் குடும்பங்களுக்கு இடையேயான பிணைப்பு முடிவதில்லை என்பதை காட்டும் வகையில் அமைந்தது.