இந்தியா

பிரதமர் மோடி பங்கேற்கும் விழாவில் போலி அடையாள அட்டை, துப்பாக்கியுடன் வந்த வாலிபர் கைது!

ரோஹன் பாரேக் தனியாக வரவில்லை; அவருடன் ஒரு தனியார் பாதுகாவலரும் வந்திருந்தார்.

பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி, துப்பாக்கியுடன் நுழைய முயன்றது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள நீதா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பிரதமர் வருகையை முன்னிட்டு அந்தப் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பும், தீவிரக் கண்காணிப்பும் போடப்பட்டிருந்தது.

போலி அடையாள அட்டை

நிகழ்ச்சி வளாகத்தின் நுழைவுப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிரச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, 24 வயதான ரோஹன் பாரேக் என்ற இளைஞர் உள்ளே செல்ல முயன்றார். அவர் தன்னை 'பிரதமர் அலுவலக அதிகாரி' என அறிமுகப்படுத்திக் கொண்டு அடையாள அட்டையைக் காண்பித்துள்ளார். ஆனால், சந்தேகமடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரது அடையாள அட்டையைத் தீவிரமாகப் பரிசோதித்தபோது, அது முற்றிலும் போலி என்பது தெரியவந்தது.

துப்பாக்கியுடன் சிக்கிய பாதுகாவலர்

ரோஹன் பாரேக் தனியாக வரவில்லை; அவருடன் ஒரு தனியார் பாதுகாவலரும் வந்திருந்தார். சோதனையின் போது அந்தப் பாதுகாவலரிடமிருந்து ஒரு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, இருவரையும் உடனடியாகக் கைது செய்த காவல்துறையினர், அவர்களை பாந்த்ரா குர்லா வளாக காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.

போலீசார் தீவிர விசாரணை

பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி, துப்பாக்கியுடன் நுழைய முயன்றதன் பின்னணியில் என்ன திட்டம் இருந்தது என்பது குறித்து மும்பை குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT