மணீஷ் குமார் குப்தா 
இந்தியா

பீகாரில் போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி கைது.. மக்களை ஏமாற்றி ரூ.100 கோடி சொத்து சேர்த்து சொகுசாக வாழ்ந்தது அம்பலம்

23 கிரெடிட் கார்டுகள் மற்றும் 8 டெபிட் கார்டுகள், 4 வங்கிகளின் செக் புக்குகள், 5 ஐபோன்கள் பறிமுதல்

பீகாரில் மக்களை ஏமாற்றி பணம் பறித்து வந்த போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தின் கோக்ரி பகுதியைச் சேர்ந்த மணீஷ் குமார் குப்தா என்கிற சிக்கு ஆவார்.

கைது

நேற்று இரவு கோக்ரி காவல் எல்லைக்குட்பட்ட ஜமால்பூர் சந்தைப் பகுதியில், இந்திய அரசு என பெயர் பலகை பொருத்திய வாகனத்தில் வளம் வந்த மணீஷ் குப்தாவை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் பிடித்தனர்.

போலீசார் விசாரித்தபோது, பதற்றமடையாமல் தனது மொபைல் போனில் இருந்த ஒரு போலி ஐஏஎஸ் ஐடி கார்டைக் காட்டியிருக்கிறார்.

மேலும், தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் ரகசிய ஏஜென்ட் என்று காவல்துறையினரிடமே வாதிட்டுள்ளார்.

அவர் பொய் சொல்வது உறுதி செய்யப்பட்டதும், ககாரியா எஸ்பி பானு பிரதாப் சிங் உத்தரவின் பேரில், அவரது வீட்டை போலீசார் சோதனையிட்டனர்.

ஆடம்பரம்

அவரது வீட்டின் வெளியே இந்திய அரசு என்ற பலகை பொருத்தப்பட்ட இரண்டு ஆடம்பர கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

மேலும், மணீஷ் குப்தாவின் வீட்டிலிருந்து டெஸ்லா உள்ளிட்ட சொகுசு கார்கள், பல்வேறு வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் 23 கிரெடிட் கார்டுகள் மற்றும் 8 டெபிட் கார்டுகள், 4 வங்கிகளின் செக் புக்குகள், 5 ஐபோன்கள், விலையுயர்ந்த வெளிநாட்டு மதுபானங்கள், 2 கலைமான் கொம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மக்களை மிரட்டியும் ஏமாற்றியும் மணீஷ் குப்தா சட்டவிரோத சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்களை சேர்த்துள்ளதாக ககாரியா எஸ்பி பானு பிரதாப் சிங் தெரிவித்துள்ளார். அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது.