மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள ஒரு பிரபல தனியார் வங்கியில், போலி தங்க நகைகளை அசல் தங்கம் எனக் கூறி அடகு வைத்து ரூ.25 கோடி வரை சுருட்டிய மோசடி வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சச்சின் ராவத் என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று அதிரடியாகக் கைது செய்தனர்.
கடந்த 5 மாதங்களாக தலைமறைவாக இருந்த அவர் பிடிபட்டதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி வங்கியின் மனிஷ் நகர் கிளையில் வழக்கமான தங்கக் கடன் தணிக்கை நடைபெற்றது.
அப்போது ஒரு குறிப்பிட்ட கணக்கில் வைக்கப்பட்ட நகைகளின் எடை மற்றும் தங்கத்தின் தரம் குறித்து தணிக்கையாளர்கள் சந்தேகம் எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து, தந்தோலி காவல் நிலையத்தில் மார்ச் 30 அன்று அதிகாரப்பூர்வமாகப் புகார் பதிவு செய்யப்பட்டது.
விசாரணையைத் தீவிரப்படுத்திய வங்கி, நாக்பூரின் 9 வெவ்வேறு கிளைகளில் உள்ள 152 தங்கக் கடன் கணக்குகளை மறுஆய்வு செய்தபோது, மொத்தம் ரூ.23.31 கோடி முதல் ரூ.25 கோடி வரை மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
டிசிபி தீபக் அகர்வால் தலைமையிலான பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்த மோசடி நால்வர் கூட்டணியால் சாத்தியமாகியது தெரியவந்தது.
முக்கிய குற்றவாளியான சச்சின் ராவத், ஆரம்பத்தில் (2018-19) தனது சொந்த பெயரில் முறையாகக் கடன் பெற்று வங்கியின் நம்பிக்கையை சம்பாதித்துள்ளார்.
பின்னர், தனது பழைய இரும்பு வியாபாரத்தில் பணிபுரியும் ஏழைத் தொழிலாளர்களின் பெயர்களைப் பயன்படுத்திப் போலி நகைகள் மூலம் பல கோடி கடன் வாங்கியுள்ளார்.
இது தவிர, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரில் 38 போலி கடன்கள் பெறப்பட்டுள்ளன.
வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட நகை மதிப்பீட்டாளர், ஒரு போலி சான்றிதழுக்கு தலா ரூ.5,000 லஞ்சம் வாங்கிக்கொண்டு, மொத்தம் 155 போலி நகை மதிப்பீட்டு அறிக்கைகளைத் தயார் செய்து கொடுத்துள்ளார்.
வங்கியின் கிளை மேலாளர்கள் மற்றும் உதவி மேலாளர் ஆகியோர் சச்சின் ராவத்தின் இந்த மோசடித் திட்டங்களுக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளித்துள்ளனர்.
3 மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும் தணிக்கையின் போது, போலி நகைகளை அசல் தங்கம் தான் என்று சான்றளிக்க தணிக்கையாளர்களுக்கும் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகளின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் லேப்டாப்கள், மொபைல் போன்கள், சொகுசு வாகனங்கள் மற்றும் போலி கடன் வாங்கியவர்களின் பட்டியல் அடங்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பணப் பரிமாற்றப் பாதைகளை ஆய்வு செய்த போலீசார், தற்போது இந்த நெட்வொர்க்கின் தலைவரான சச்சின் ராவத்தை சிறையில் அடைத்துள்ளனர்.
"கைதுகளோடு இந்த வழக்கு முடிந்துவிடவில்லை; மோசடி செய்யப்பட்ட ஒட்டுமொத்தப் பணத்தை மீட்பதும், இதில் தொடர்புடைய மற்ற போலி வாடிக்கையாளர்களைக் கண்டறிவதுமே எங்களின் அடுத்தகட்ட இலக்கு" எனப் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.