தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு, யு.பி.ஐ. மூலமாக பணம் எடுக்கும் புதிய வசதியை டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த நடைமுறை மூலம் சந்தாதாரர்கள் 75% வரை பணத்தை எளிதாக தங்கள் வங்கி கணக்கில் மாற்றிக்கொள்ளலாம்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது, தனது உறுப்பினர்களின் வசதிக்காகவும், விரைவான சேவைகளை வழங்குவதற்காகவும் பல்வேறு டிஜிட்டல் சீர்திருத்தங்களை அவ்வப்போது அமல்படுத்தி வருகிறது.
தற்போது, வருங்கால வைப்புநிதி பணத்தை யு.பி.ஐ. மூலம் எடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த நடைமுறையில் அனைத்து விவரங்களும் சரிபார்க்கப்பட்ட பிறகு, வருங்கால வைப்பு நிதியில் இருந்து எடுக்கப்படும் பணம் சந்தாதாரரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அதன் பிறகு உறுப்பினர்கள் வங்கியில் இருந்து பணத்தை எடுத்து கொள்ளலாம்.
யு.பி.ஐ. செயலி மூலமாக வருங்கால வைப்பு நிதி பணத்தை எடுக்கும் வசதியை வருகிற டிசம்பர் மாதத்திற்குள் அறிமுகம் செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கான சோதனை முறைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு புதிய செயலியையும் அறிமுகம் செய்கிறது. இதன்மூலம் சந்தாதாரர்கள் வருங்கால வைப்புநிதியில் இருந்து யு.பி.ஐ.மூலம் 75 சதவீதம் வரை பணத்தை எடுக்க முடியும்.
தற்போதைய விதிகளின் படி, வருங்கால வைப்பு நிதி இருப்பில் குறைந்தபட்சம் 25 சதவீதம் சந்தாதாரரின் கணக்கில் இருக்க வேண்டும். கல்வி, திருமணம் மற்றும் வீடு கட்டுவது உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளுக்கு, சந்தாதாரர் கையிருப்பில் இருந்து 75 சதவீதம் வரை எடுத்துக்கொள்ளலாம்.
புதிய நடைமுறை அமலுக்கு வந்தால், வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட வைப்பு நிதி தொகையை யு.பி.ஐ. மூலமாக நேரடியாக தங்கள் வங்கி கணக்கிற்கு மிக எளிதாக மாற்றிக்கொள்ள முடியும்.
தற்போதுள்ள நடைமுறைப்படி, வருங்கால வைப்பு நிதி பணத்தை எடுக்க ஆன்லைன் மூலம் கோரிக்கை வைத்து, அது பரிசீலிக்கப்பட்டு, அதன்பிறகு வங்கி கணக்கிற்கு பணம் வர சில நாட்கள் ஆகும். ஆனால் இந்த புதிய வசதியில் பணம் எடுக்கும் செயல்முறை மிகவும் எளிமையாக்கப்பட்டு உடனடியாக பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
எவ்வளவு பணத்தை யு.பி.ஐ.மூலமாக எடுக்கலாம், சந்தாதாரர்கள் இதற்கு என்னென்ன தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தெளிவான வழிகாட்டுதல்களை தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு விரைவில் வெளியிட உள்ளது.