கேரளம் முதலமைச்சர் வி.டி.சதீசன் நேற்று சபரிமலை ஐயப்பன் கோவிலுல் வழிபாடு செய்த நிலையில், சபரிமலை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு திருப்பதி கோவிலில் பின்பற்றப்படும் வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு முதலமைச்சர் வி.டி.சதீசன் நேற்று சென்று வழிபாடு செய்தார்.
கேரளத்தில் பெய்து வரும் கனமழையையும் பொருட்படுத்தாமல், ஐயப்ப பக்தர்கள் வழக்கமாக அணியும் கருப்பு உடையை அணிந்து முதலமைச்சர் கோவிலுக்கு சென்றார்.
மலையாள மாதமான துலாம் பூஜைகளுக்காக ஐயப்பன் கோவில் திறக்கப்பட்டதை அடுத்து பக்தர்களின் கூட்டம் அலை மோதியது.
இதையடுத்து நவம்பர் 17-ஆம் தேதி தொடங்கவிருக்கும் மண்டலம் மகரவிளக்கு புனித யாத்திரைக்கான ஏற்பாடுகளையும் சதீசன் ஆய்வு செய்தார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்த்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சபரிமலை பக்தர்களுக்கு பாதுகாப்பான மற்றும் அமைதியான புனித யாத்திரையை உறுதி செய்வது கேரள அரசின் உத்தரவாதமாகும்.
ஐயப்ப சுவாமியின் இருப்பிடத்திற்கு வரும் பக்தர்களுக்காக மாநில அரசு விரிவான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பொதுப் பணிகளை முடிப்பது மற்றும் கழிவு மேலாண்மைக்கான செயல் திட்டத்தை வகுப்பது ஆகியவை இதில் அடங்கும்.
சபரிமலையை நாட்டின் சிறந்த புனித யாத்திரைத் தலங்களில் ஒன்றாக மாற்றுவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.
தற்போதைய புனித யாத்திரை காலத்திற்குப் பிறகு, திருப்பதி மாதிரியை பின்பற்றி சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும்” என பதிவிட்டுள்ளார்.