அவர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேரக்கூடும் என்ற ஊகங்களுக்கு மத்தியில், பஞ்சாப் முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான அமரிந்தர் சிங், நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்ற சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்.
இந்த விழாவில், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட 'இந்தியா' (INDIA) கூட்டணியின் முக்கிய தலைவர்களுடன் அமரிந்தர் சிங் முன்வரிசையில் அமர்ந்திருந்தார்.
பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக, அம்மாநில முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சரண்ஜித் சிங் சன்னி நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.
அமரிந்தர் சிங் பாஜகவின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தியில் இருப்பதாகவும், அவர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணையக்கூடும் என்றும் பேச்சு அடிபடுகிறது. இருப்பினும், இத்தகைய ஊகங்களை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
மேலும், ராஜீவ் காந்தியின் இளமைக்கால நண்பராக இருந்ததால், காந்தி குடும்பத்துடன் அவர் நெருக்கமான பிணைப்பை கொண்டுள்ளார்.
குறிப்பிடத்தக்க வகையில், புத்தக வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி தனது உரையின்போது, அமரிந்தர் சிங்கிற்கும் தங்கள் குடும்பத்திற்கும் இருந்த தொடர்பை நினைவு கூர்ந்தார். தனது தந்தை ராஜீவ் காந்தி, தனது தாயார் சோனியா காந்தியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, அவர் அமரிந்தர் சிங்குடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார் என்று ராகுல் குறிப்பிட்டார்.
"இங்கே அமரிந்தர் சிங் ஜி இருப்பதை காண்கிறேன். நான் சொல்வதை நீங்கள் நம்பமாட்டீர்கள். என் பெற்றோர்கள் (ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்தி) விவாதிப்பதை கண்டிருக்கிறோம், ஆனால் அவர்கள் ஒருமுறை மட்டுமே சண்டையிட்டு கொண்டதை பார்த்திருக்கிறோம்.
"தற்செயலான நிகழ்வுகளில் ஒரு விசித்திரமான விஷயம் என்னவென்றால், அந்த சம்பவம் நடந்தபோது என் தந்தை அமரிந்தர் சிங் ஜியிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார்.
அவர்கள் சண்டையிட்டு கொண்டதை பார்த்த ஒரே தருணம் அதுதான். அப்பா அமரிந்தர் சிங்குடன் பேசிக்கொண்டிருக்க, அம்மா ஏதோ சொல்ல முயன்றார்; அவர் மூன்று அல்லது நான்கு முறை அதையே மீண்டும் சொல்ல, அப்பாவுக்கு கோபம் வந்துவிட்டது - அதுதான் அந்த சண்டை," என்று அந்த நிகழ்வில் ராகுல் காந்தி நினைவு கூர்ந்தார்.
சோனியா காந்தி எழுதிய "பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்" என்ற புத்தகம், திங்கள்கிழமை டெல்லியில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வின்போது சோனியா காந்தியுடன் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தி வத்ராவும் உடனிருந்தனர்.