இந்தியா

மேகதாது திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படவில்லை - அன்புமணி கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்

மேகதாது அணை விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணைய ஒப்புதல் கிடைக்கும் வரை சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படாது.

மேகதாது திட்டத்திற்கு இறுதி சுற்றுச்சூழல் அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

காவிரி நீரை பங்கிடுவது தொடர்பாக, தமிழகம் மற்றும் கர்நாடகத்துக்கு இடையே நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வருகிறது.

மேகதாது விவகாரம்

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால், அது தமிழக விவசாயத்தை பாதிக்கும் என்பதால் தமிழகம் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழக விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், மேகதாது அணை குறித்து எழுத்துப்பூர்வமாக சில கேள்விகளை எழுப்பி இருந்தார்.

மத்திய மந்திரி ராஜ் பூஷண்

இதற்கு மத்திய ஜல்சக்தி துறை இணை மந்திரி ராஜ் பூஷண் சவுத்ரி அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில், காவிரி நீர் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ந் தேதி வழங்கிய தீர்ப்பின்படி, காவிரி ஆற்றின் குறுக்கே எந்த வகையான கட்டமைப்பையும் அமைப்பதற்கு, கர்நாடக மாநிலம், தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒப்புதலை பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது.

மத்திய மந்திரியின் இந்த பதில் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பதிலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.

மத்திய அரசு

இந்நிலையில், பாமக தலைவரும் எம்பியுமான அன்புமணியின் கேள்விக்கு மத்திய அமைச்சர் எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளார். அதில்,

* மேகதாது திட்டத்திற்கு இறுதி சுற்றுச்சூழல் அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை.

காவிரி மேலாண்மை ஆணையம்

* மேகதாது அணை விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணைய ஒப்புதல் கிடைக்கும் வரை சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படாது.

* வன அனுமதிக்கான விண்ணப்பமும் தற்போது பரிசீலனையில் இல்லை.

* மேகதாது குடிநீர், சமநிலை நீர்த்தேக்கத் திட்டத்திற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரி 2019-ல் கர்நாடகா விண்ணப்பித்துள்ளது.

இரு மாநில பிரச்சனை

* இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனை என்பதால் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஒப்புதல் தரும் வரை ToR முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

* ஜல்சக்தி அமைச்சகம் விரிவான திட்ட அறிக்கையை இறுதி செய்து CWMA ஒப்புதல் அளித்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.