தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆசிரியர் சங்க விழாவில் கலந்துகொண்டு பேசினார். அந்நிகழ்ச்சியில் பேசிய அவர்.,
“ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்தில் 1.10 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் தங்கள் படிப்பை முடிக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் ஆசிரியர்கள் ஒரு வெள்ளைத்தாளை கொடுத்து வேலைக்கான விண்ணப்பத்தை நிரப்பச் சொன்னால் முழிக்கிறார்கள்.
இது கிரிமினல் வேஸ்ட். பட்டத்தை பெற்றாக்கூட ஒரு வேலைக்கு விண்ணப்பிக்க மாட்டான். திறன்களை வளர்த்துக் கொள்வதும் இல்லை.” எனப் பேசினார்.
இவரின் இந்த பேச்சு மாணவர்களை இழிவுப்படுத்தும் விதமாக அமைந்ததாக பிஆர்எஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்துள்ளன.
“அவர் தன் வாழ்நாளில் எப்போதாவது போட்டித் தேர்வு எழுதியதுண்டா? எப்போதாவது வேலைக்கான நேர்காணலில் கலந்துகொண்டதுண்டா? எப்போதாவது ஒரு தொழில்முறைச் சூழலில் பணியாற்றியதுண்டா?” என பிஆர்எஸ் தலைவர் கே.டி.ராமராவ் கேள்வி எழுப்பினார்.
மாநில பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் என்.வி. சுபாஷ், இந்த விவகாரத்தில் ரேவந்த் ரெட்டி அவரது தலைவர் ராகுல் காந்தியையே மிஞ்சுவிட்டதாக விமர்சித்தார்.
ரேவந்த் ரெட்டியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்த, தான் மாணவர்களைக் குற்றம் சாட்டவில்லை என்றும், அவர்களை வேலைக்குத் தகுதியானவர்களாக மாற்றத் தவறிய தற்போதைய கல்வி முறையையே "கிரிமினல் வேஸ்ட்" எனக் குறிப்பிட்டதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.
கிரிமினல் வேஸ்ட் என்பது ஒரு பொருளை, பணத்தை அல்லது ஒரு நன்மையை மிக அலட்சியமாக வீணாக்குவதை குறிக்கப் பயன்படும் ஒரு சொல். ஒரு காரியம் அல்லது பொருள் மிகச் சிறந்த பலனைத் தரக்கூடியதாக இருந்தும், அதைச் சரியாகப் பயன்படுத்தாமல் வீணடிப்பதைக் கண்டு ஏற்படும் அதிருப்தியை வெளிப்படுத்த இந்த வார்த்தை பயன்படுகிறது.