இந்தியா

40 ஆண்டுகளாக தாயை விட்டுவிட்டு தனியாக சென்ற மகள்கள் - தாயை அடக்கம் செய்ய முன்வரும்படி பத்திரிகையில் விளம்பரம்

சென்னை சேர்ந்த லலிதா கிருஷ்ணமூர்த்தி, தனது மகள்களை பிரிந்து மும்பையில் கடந்த 40 வருடங்களாக தனியாக வாழ்ந்து வந்தார்.

மும்பையில் கடந்த 40 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்த மூதாட்டி ஒருவர் வயது மூப்பு காரணமாக இறந்திவிட்டதை தொடர்ந்து, அவரது உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் முன்வரும்படி பத்திரிகையில் வெளியான செய்தி சமூக வலைதளத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை பூர்வீகமாக கொண்ட லலிதா கிருஷ்ணமூர்த்தி என்ற மூதாட்டி ஒருவர், தனது இரண்டு மகள்களை பிரிந்து மும்பையில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் கடந்த 40 வருடங்களாக தனியாக வாழ்ந்து வந்தார்.

இவர் தான் தனியாக வசித்து வந்த அபார்ட்மெண்டில், அக்கம்பக்கத்தினருடன் பெரிதாக பேசாமல் தனியாகவே வாழ்ந்து வந்துள்ளார்.

இவருக்கு திருமணமான இரண்டு மகள்கள் இருப்பது, அந்த அபார்ட்மெண்டில் உள்ள சில பேருக்கு மட்டும் தெரிந்துள்ளது. தங்களது தாயை மும்பையில் விட்டுவிட்டு அவரின் மகள்கள் இங்கிலாந்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கடந்த 40 ஆண்டுகளாக மூதாட்டியை அவரது மகள்கள் மற்றும் உறவினர்கள் என யாரும் வந்து சந்திக்காத சூழ்நிலையில், அக்டோபர் 13 அன்று வயது மூப்பு காரணமாக மூதாட்டி உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து மூதாட்டியின் மகள்கள் மற்றும் உறவினர்கள் குறித்து தகவல் தெரியாததால், மூதாட்டியை நல்லடக்கம் செய்வதற்கு உறவினர்கள் முன்வருமாறு அபார்ட்மெண்டில் வசித்து வந்த கிஷோர் சுப்பிரமணியன் என்பவர் பத்திரிகையில் விளம்பரம் செய்தார்.

கூட்டு குடும்பங்கள் குறைந்து வருகிறது

மேலும் அந்த விளம்பரத்தில், “இது இனி ஒரு பெண்ணின் கதை அல்ல; நம் வீடுகளில் நமது அறைகளில் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தந்த பெற்றோர்கள், இன்று ஒரு துணையில்லாமல் இருப்பது வேதனையளிக்கிறது.

மேலும் அவர்களது கடைசி காலத்தில் தொலைக்காட்சி பெட்டி மட்டுமே, அவர்களுக்கு ஒரு துணையாக இருக்கிறது.

பிள்ளைகள் தங்களின் எதிர்காலத்தை நோக்கி செல்கிறார்கள்; ஆனால் அவர்கள் தங்களின் பெற்றோர்களில் இறப்பிற்கு கூட சிலசமயம் வருவதில்லை.

பெற்றோர்களுடனான குழந்தைகளின் தொலைபேசி அழைப்பு சுருங்குகிறது, பல ஆண்டுகளாக தங்களின் பெற்றோர்களை நேரில் வந்து பார்க்காமல் பிள்ளைகள் இருக்கின்றனர்.

தற்போது கூட்டு குடும்பங்கள் குறைந்து வருகின்றன; பல பெற்றோர்கள் காலப்போக்கில் தங்களின் பிள்ளைகளுக்காக காத்திருப்பதை நிறுத்தி விடுகிறார்கள்.

ஆனால் பெற்றோர்களின் ஆழ்மனதில் அந்த ஏக்கம் ஆறாத வடுவாக மாறுகிறது” என்று விளம்பரம் செய்யப்பட்டது.

இணையத்தில் விவாதம்

இதுகுறித்து பயனர்கள் வெளியிட்ட எக்ஸ் பதிவில், இந்த மரணம் கூட பெரிய அளவில் ஒரு துயரமாக தெரியவில்லை, ஆனால் அவர் இறந்தது பிள்ளைகளுக்கு தெரியாமல் உள்ளதுதான் வருத்தமாக உள்ளதாக பதிவிட்டனர்.

மேலும், மனிதர்களாகிய நாம், நாளுக்கு நாள் இந்த மாய உலகத்தில் சிக்கி தங்களின் உறவுகளை மறந்து கொண்டிருப்பதாக பதிவிட்டனர்.

இந்த நிகழ்வு, நாம் நமது வேர்களுக்கும் பழைய பூர்வீக விழுமியங்களுக்கும் திரும்புவதற்கு ஒரு நினைவூட்டலாக இருப்பதாக பதிவிட்டனர்.

இந்த மூதாட்டியின் இறப்பிற்கு உறுதுணையாக இருந்த கிஷோர் சுப்பிரமணியன் அவர்களுக்கு நன்றி என்றும், மூதாட்டியின் ஆன்மா சாந்தியடையட்டும் என்றும் பயனர்கள் பதிவிட்டனர்.

SCROLL FOR NEXT