எல் நினோ தாக்கத்தை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய விவசாயத் துறை அமைச்சர் அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார்.
பசிபிக் பெருங்கடலில் 'எல் நினோ' காலநிலை நிகழ்வு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளதாகவும், இது வரும் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் மிக அதிவேகமாகத் தீவிரமடையக் கூடும் என்றும் ஐநாவின் உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.
இதனால் உலகெங்கும் வெப்ப அலைகள், வறட்சி மற்றும் அதீத மழைப்பொழிவு போன்ற தீவிர வானிலை மாற்றங்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
எல் நினோ காரணமாக இந்தியாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பாதிக்கப்படலாம் என்ற கவலை எழுந்துள்ளது.
இந்நிலையில் நேற்று டெல்லியில், பருவநிலை தயார்நிலை குறித்த ஆய்வுகூட்டத்தின் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நாட்டின் பல பகுதிகளில் சமீப நாட்களில் நல்ல மழைப்பொழிவு பதியாகியுள்ளது. வழக்கமாக மழைபொழிவு பொய்க்கும் மாவட்டங்கள் 262இல் இருந்து 178 ஆக குறைந்துள்ளது. ஜூலையில் மழைக்கால பருவநிலை முன்னேறியுள்ளது. மழைபொழிவு பொய்த்த சதவீதம் 24 ஆக குறைந்துள்ளது.
மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத்,. உத்தரப் பிரதேசம், ராஜஸதன், கர்நாடகா, பீகார், ஜார்கண்ட், தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
அங்கு ஜூலையில் மழைப்பொழிவு அதிகம் இருப்பதற்கான நம்பிக்கை உள்ளது. இதனால் காரிப் பயிர்கள் நடவு அதிகரிக்கும். இதுவரை 350 லட்சம் ஹெக்டேருக்கு காரிப் பயிர்கள் நடவு நடந்து முடிந்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் செய்யப்பட்டதை விட இது 91 லட்சம் ஹெக்டேர் அளவு குறைந்ததே ஆகும்.
விவசாயிகள் தாமதித்த மழைபொழிவை சமாளிக்க குறுகிய கால பயிர்களையும், சோளம், பஜ்ரா, மூங் போன்ற குறைந்த நீர் தேவைப்படும் பயிர்களையும் பயிரிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எல் நினோ பாதிப்புகளை கையாள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதமே தொடங்கிவிட்டது.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் உதவியுடன், பாதிக்கப்பட வாய்ப்புள்ள மாவட்டங்களுக்கான அவசரகாலத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு மாநில அரசுகளுடன் பகிரப்பட்டுள்ளன.
வானிலை மாறுபாடுகளால் சாகுபடி பாதிக்கப்படாமல் இருக்க, அவசரத் தேவைக்காக 1.75 லட்சம் குவிண்டால் தேசிய விதை இருப்பு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்குக் கடன் உதவி வழங்கும் நோக்கில் கிசான் கிரெடிட் கார்டு வழங்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஜூன் 30 வரை பெறப்பட்ட 1.14 லட்சம் விண்ணப்பங்களில், 94,000க்கும் அதிகமான விண்ணப்பங்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரதான் மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் மூலம் விவசாயிகளுக்குப் பொருளாதாரப் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எல் நினோ கண்காணிப்புப் பிரிவு, பயிர் வானிலை கண்காணிப்புக் குழு மற்றும் மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறைகள் மூலம் பருவமழையின் நகர்வுகள், பயிர்களின் ஆரோக்கியம் மற்றும் சந்தை நிலவரங்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
எதிர்பாராத சவால்களை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது" என சிவராஜ் சிங் சவுகான் உறுதி அளித்துள்ளார்.