இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள 'எல் நினோ' காலநிலை மற்றம் காரணமாக, நாட்டின் முக்கிய விவசாயப் பகுதிகளில் மழைப்பொழிவு 94 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும்.
மழைப்பொழிவு குறைவாக இருக்கும் என்பதால், அதிகத் தண்ணீர் தேவைப்படும் நெல் போன்ற பயிர்களுக்குப் பதிலாக, வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய மாற்றுப் பயிர்களைப் பயிரிட விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள 10,000 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளில் இருக்கும் சுமார் 63 லட்சம் விவசாயிகளுக்கு இந்த விழிப்புணர்வு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
கேழ்வரகு, உளுந்து, பாசிப்பயறு, கொள்ளு போன்ற பயிர்கள் மிகக் குறைந்த தண்ணீரிலேயே நல்ல மகசூல் தரக்கூடியவை.
ஜார்கண்ட் போன்ற பருவமழையை மட்டுமே நம்பியிருக்கும் மாநிலங்களில் இந்த பயிர் மாற்றம் தற்போதே பெரிய அளவில் தொடங்கிவிட்டது.
மண்ணில் இருக்கும் ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ள 'மல்ச்சிங்' என்ற எளிய இயற்கை விவசாய முறையை அரசு தீவிரமாக ஊக்குவித்து வருகிறது.
அறுவடைக்குப் பின் எஞ்சிய வைக்கோல், காய்ந்த இலைகள் மற்றும் பழைய சாக்குப்பைகளை கொண்டு பயிர்களைச் சுற்றியுள்ள மண்ணை மூடுவதன் மூலம், வெயிலால் தண்ணீர் ஆவியாவது பெருமளவு தடுக்கப்படுகிறது.
இந்த மல்ச்சிங் முறை தண்ணீரைச் சேமிப்பதோடு மட்டுமின்றி, தேவையில்லாத களைகள் முளைப்பதையும் தடுத்து மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இதனுடன் சொட்டுநீர்ப் பாசனம் மற்றும் கலப்புப் பயிர் முறைகளையும் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வறட்சிக் கால விவசாய நடைமுறைகள் மற்றும் இயற்கை விவசாய முறைகளை நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்குக் கொண்டு சேர்க்க, மத்திய வேளாண் அமைச்சகம் தினசரி அடிப்படையில் பல்வேறு மாநிலங்களில் ஆன்லைன் வெபினார்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.