Sarath Pawar, Eknath Shinde 
இந்தியா

ஏக்நாத் ஷிண்டே - சரத் பவார் சந்திப்பின் பின்னணி என்ன?.. மகாராஷ்டிர அரசியலில் மற்றொரு பூகம்பம்?

உத்தவ் சிவசேனா அணியின் 9 இல் 6 எம்பிக்கள், பாஜக கூட்டணியில் உள்ள ஷிண்டே சிவசேனாவின் சேர்ந்தனர்.

மகாராஷ்டிர அரசியலில் அடுத்தடுத்த பரபரப்பு திருப்பங்கள் நடந்து வருகின்றன. இந்தியா கூட்டணியில் உள்ள உத்தவ் சிவசேனா அணியின் 9 இல் 6 எம்பிக்கள், பாஜக கூட்டணியில் உள்ள துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா அணிக்கு கடந்த மாதம் தாவினார். ஆபரேஷன் டைகர் மூலம் இந்த கட்சித் தாவலை ஏக்நாத் ஷிண்டே சாத்தியமாகியுள்ளார்.

பாஜக நாடு முழுவதும் எதிர்க்கட்சி எம்பிகளை நேரடியாவோ, மறைமுகமாகவோ தன் வசம் இழுத்து வருகிறது. டெல்லியில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியில் இருந்து ராகவ் சதா, சுவாதி மலிவாலை உள்ளடக்கிய எம்பி குழு பாஜகவுக்கு தாவியது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசின் 20 எம்பிக்கள் கட்சியில் இருந்து விலகி பாஜகவுக்கு மறைமுக ஆதரவை வழங்கி வருகின்றனர்.

அதே பாணியில் மகாராஷ்டிராவில் சிவசேனாவின் பெரும்பான்மை எம்பிகளை வளைத்துப்போட்ட நிலையில் அடுத்து சரத் பவார் தேசியவாத காங்கிரசை பாஜக இலக்கு வைத்துள்ளது.

அஜித் பவார்

சிவசேனாவை போல இரண்டு பட்டு நிற்கும் சரத் பவார் - அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் அணிகளில் இதனால் சலசலப்பு நிலவுகிறது.

பாஜக கூட்டணியில் இடம்பெற்று துணை முதல்வராக இருந்த அஜித் பவார் பாராமதி விமான விபத்தில் மறைந்த நிலையில் அவர் வகித்த பதவி அவரின் மனைவி சுனேத்ரா பவாருக்கு வழங்கப்பட்டது.

எதிரெதிர் அணிகளாக இருந்தபோதும், அண்ணன் மகன் அஜித் பவார் இருந்த சமயத்தில் இருந்தே எதிரணியில் இருக்கும் அவருடன் சரத் பவார் உறவை பேணி வந்தார்.

சுவாரஸ்யமாக, தான் இடம்பெற்ற பாஜக கூட்டணியில் இருந்துகொண்டே, சரத் பவார் அணியுடன் சேர்ந்து மகாராஷ்டிர உள்ளாட்சி தேர்தலை சந்தித்தார்.

பிரசாரத்தின்போது உள்ளாட்சிகளில் பாஜகவின் ஊழல்களை அஜித் பவார் வெளிப்படையாக விமர்சித்து வந்தார்.

இதன் பின்னணியில் பிரசாரத்திற்கு செல்லும்போது அஜித் பவார் தனி விமானம் விபத்துக்குள்ளாகி அவர் இறந்ததன் பின்னால் பல சந்தேகங்கள் எழுந்தன.

ஆனால் சுனேத்ரா பவார் துணை முதல்வர் ஆக்கப்பட்டதும் அந்த ஊகங்கள் காலப்போக்கில் தேய்ந்து போயின.

சந்திப்பு

இந்த சூழலில் தான் தனது எதிரணியில் இருந்து எம்பிகளை லாவகமாக இழுத்த ஏக்நாத் ஷிண்டேவை எதிரணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நேரில் சென்று சந்தித்துள்ளார்.

ஷிண்டேவின் அலுவலகமான விதான் பவனில் நேற்று இருவரின் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இருவரும் 45 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

சரத் பவார் அணியும் பாஜக கூட்டணி வசம் செல்லுமா என்ற ஊகங்கள் இதனால் வலுத்துள்ளது. ஆனால் கட்சி தேசியவாத கட்சி தரப்பு இதை ஆமோதிக்கவில்லை. மறுக்கவும் இல்லை.

மறுபுறம் அரசின், மகாராஷ்டிரா - கர்நாடகா எல்லை பிரச்சனைக்கு தீர்வு காணும் கமிட்டியில் சரத் பவார் இடம்பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.