கேரளம் மாநிலம் கொச்சியை சேர்ந்த சி.எம்.ஆர்.எல். (கொச்சி மினரல்ஸ் மற்றும் ரூடைல்) என்ற நிறுவனம், முன்னாள் முதல்-மந்திரி பினராய் விஜயனின் மகள் வீணா விஜயன் நடத்திய ‘எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ்’ என்ற நிறுவனத்துக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கி வந்து உள்ளது.
சி.எம்.ஆர்.எல். நிறுவனம், வீணா விஜயன் நடத்திய நிறுவனத்துக்கு பண பரிமாற்றம் செய்துள்ளது. வீணா நிறுவனத்திற்கு மாதந்தோறும் 3 லட்சம் ரூபாயும், வீணாவுக்கு ஆலோசனை வழங்கியதாக 5 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணம் வெளிநாட்டுக்கு பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முன்னாள் முதல்-மந்திரி பினராய் விஜயன், அவரது மகள் வீணா விஜயன், அவரது கணவரும், முன்னாள் மந்திரியுமான முகமது ரியாஸ் ஆகிய 3 பேர் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து கேரளம் மாநில ஊழல் அமைப்பு விசாரித்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த அமலாக்கத்துறை 3 பேர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய ஐகோர்ட்டில் அனுமதி வாங்க முயற்சித்தது. இந்த நிலையில் கேரளம் மாநில காங்கிரஸ் அரசு இந்த ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க சிறப்பு புலனாய்வு பிரிவை அமைக்க உத்தரவிட்டது.
அமலாக்கத்துறை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் அதனை விசாரித்த தனி நீதிபதி பக்ரூதீன், கேரளம் அரசின் புலனாய்வு பிரிவு விசாரணை தேவையில்லை. அமலாக்கத்துறையே ஆதாரங்களுடன் இந்த வழக்கை விசாரித்து உள்ளது. எனவே குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் மீதும் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
அதன்பேரில் 3 பேர் மீதும் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. அதனை எதிர்த்து பினராய் விஜயன் உள்பட 3 பேரும் கேரளம் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு பினராய் விஜயன் உள்பட 3 பேரின் மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து பண பரிமாற்ற வழக்கில் பினராய் விஜயன் உள்ளிட்ட 3 பேரும் போலீசார் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கலாம் என்று கருதப்பட்டது.
இந்தநிலையில் காவல்துறையின் நடவடிக்கைக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் பினராய் விஜயன் இன்று அவசர மனு தாக்கல் செய்தார். அவருக்காக மூத்த வக்கீல் சித்தார்த் லூர்தா ஆஜரானார். பினராய் விஜயனுக்கு 80 வயதுக்கு மேல் ஆகிவிட்டதாகவும், அவர் தற்போது கைது மற்றும் பிற நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் கோர்ட்டில் தெரிவித்தார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி சூர்யகாந்திடம் அவர் கேட்டுக் கொண்டார். இந்த வழக்கை வருகிற 26 அல்லது 27-ந்தேதியில் விசாரிக்கலாம் என்று தலைமை நீதிபதி முதலில் கூறினார். இருப்பினும் மனுவின் அவசர தன்மையை வக்கீல் வலியுறுத்தியதன் காரணமாக, விடுமுறை கால அமர்வை அமைப்பது குறித்து பரிசீலிப்பதாக அவர் கூறினார்.
இதற்கிடையே வருகிற 23-ந்தேதி ஆஜராகும்படி பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சட்டசபை கூட்டத்தொடர் 29-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. அதன்பின் ஆஜராகி பதில் அளிப்பார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.