ராகுல் நவீன்  
இந்தியா

அமலாக்கத்துறை இயக்குநர் ராகுல் நவீன் பதவிக் காலம் ஓராண்டு நீட்டிப்பு.. யார் இவர்?

30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்

அமலாக்கத்துறையின் இயக்குநர் ராகுல் நவீனின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் அவர் 2027 ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை இப்பதவியில் தொடர்வார்.

மத்திய பணியாளர், மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவின்படி, அமைச்சரவையின் நியமனக் குழு இந்த நீட்டிப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி ராகுல் நவீனின் ஓய்வுபெறும் தேதி 2026 ஜூலை 31 ஆக இருந்த அது ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் பணிக்காலத்துடன் சேர்த்து அவர் ஆகஸ்ட் 13, 2027 வரை அந்த பதவியில் நீடிப்பார்.

ராகுல் நவீன்

பீகார் மாநிலத்தை சேர்ந்த 59 வயதான ராகுல் நவீன், 1993ஆம் ஆண்டு பேட்ச் இந்திய வருமானத்துறை (IRS) அதிகாரி ஆவார்.

ஐஐடி கான்பூரில் பிடெக் மற்றும் எம்டெக் பட்டங்களையும், ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள ஸ்வின்பர்ன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார்.

வருமான வரித் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் இவர்.

அமலாக்கத்துறை பொறுப்புகள்

2019 நவம்பரில் அமலாக்கத்துறையில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட் இவர் 2020 நவம்பரில் அமலாக்கத்துறையின் சிறப்பு இயக்குநராக பொறுப்பேற்றார்.

செப்டம்பர் 15, 2023 இல் அமலாக்கத்துறையின் இடைக்கால இயக்குநராக பொறுப்பேற்றார்.

ஆகஸ்ட் 14, 2024 இல் முழுநேர அமலாக்கத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

விதிகளின்படி, அமலாக்கத்துறை இயக்குநர் பதவிக்கு ஆரம்பத்தில் 2 ஆண்டுகள் நியமனமும், அதைத் தொடர்ந்து 3 முறை தலா ஓராண்டு பணி நீட்டிப்பும் வழங்கப்படலாம்.

இதன் அடிப்படையில் தற்போது ஓராண்டு நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.