கோப்பு புகைப்படம் 
இந்தியா

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினர்களுக்கான இடஒதுக்கீட்டு வருமான வரம்பில் மாற்றமில்லை- மத்திய அரசு

5 ஏக்கர் அல்லது அதற்கு அதிகமான விவசாய நிலம் வைத்துள்ள குடும்பங்கள் இந்த பிரிவின் கீழ் இட ஒதுக்கீடு பெற முடியாது என்ற புதிய அளவுகோல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

புது டெல்லி:

மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினர்களுக்குகான 10 சதவீத இட ஒதுக்கீட்டை பெறுவதற்கு, தற்போது அமலில் இருக்கும் அளவுகோல்களே இந்த கல்வியாண்டில் பின்பற்றப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்வகுப்பினர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணையில், பொருளாரத்தில் நலிவுற்றவர்களுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான அளவுகோல் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதற்கு, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 14, 15 மற்றும் 16 ஆகியவற்றுக்கு ஏற்ப ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய் என்ற அளவுகோல் நிர்ணயிக்கப்பட்டது என மத்திய அரசு நீதிமன்றத்தில் வாதம் மேற்கொண்டது.

அப்போது பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட், "உங்களிடம் மக்கள்தொகை அல்லது சமூக அல்லது சமூக - பொருளாதார தரவு இருக்க வேண்டும். 8 லட்சம் என்ற அளவுகோலை நீங்களே நிர்ணயிக்க முடியாது. ஒரு சிறிய கிராமத்தில் வாழும் நபர் பெறும் வருமானத்தை, எப்படி நகரங்களில் வாழும் மக்கள் பெறும் வருமானத்துடன் ஒப்பிட முடியும்?’ என கேள்வி எழுப்பினார்.

மேலும் 10 சதவீத இட ஒதுக்கீட்டு அளவு கோல்களுக்கு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களின் 'கிரீமி லேயரை' தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் ரூ. 8 லட்சத்துக்கும் குறைவான ஆண்டு வருமானம் என்ற அளவுகோலை நிர்ணயித்தது ஏன் என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதற்கு பதில் அளித்த அரசின் சொலிசிட்டர் ஜெனரல், அமலில் உள்ள 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான வருமான அளவுகோல்கள் மறு சீராய்வு செய்யப்படும் என  தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது. அவற்றில் கூறியிருப்பதாவது:-

தற்போது இந்தியாவில் நீட் மதிப்பெண்களின் அடிப்படையில் கல்லூரி சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில், விதிகள் மாற்றப்பட்டால் குழப்பம் உண்டாகும். 

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு விதிகளில் மேற்கொள்ளப்படும் மாற்றம் அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும்.

10 சதவீத இட ஒதுக்கீடு பெறுவதற்கான ஆண்டு வருமான அளவுகோல்  8 லட்சம் ரூபாய் என்ற நிர்ணயம் புதிய விதிகளிலும் தக்கவைக்கப்படும். 

ஆனால், 5 ஏக்கர் அல்லது அதற்கு அதிகமான விவசாய நிலம் வைத்துள்ள குடும்பங்கள், எவ்வளவு வருமானம் ஈட்டினாலும், அவர்கள் இந்த பிரிவின் கீழ் இட ஒதுக்கீடு பெற முடியாது என்ற புதிய அளவுகோல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளதால், நீட் சேர்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் , டெல்லியில் உள்ள மருத்துவர்கள் கடந்த வாரம் போராட்டத்தை தொடங்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.