மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, தனது சொந்த தொகுதியான உத்தர பிரதேசத்தின் ரேபரேலிக்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ளார். அவர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவை நோக்கி ஒரு மாபெரும் வரலாற்றுப் பொருளாதாரப் புயல் மற்றும் நிதியதிர்ச்சி வரவிருக்கிறது. மேற்கு ஆசியப் பகுதிகளில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் அடுத்தடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்தப்பட்டதால் மக்கள் நிறைய சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
உலகளாவிய பொருளாதார நடவடிக்கையை காரணம் காட்டி, பொதுமக்கள் தங்கம் வாங்குவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும், வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும், எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் எனப் பிரதமர் மோடி அண்மையில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஆனால் இந்த சிக்கனத்தை குறைக்க பிரதமரே எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு பதிலாக வாகனத்தில் செல்வதும், வெளிநாடுகளுக்கு சென்று உலகம் முழுவதும் சுற்றி வருகிறார்.
வருகின்ற பொருளாதார சிக்கலில் பாதிக்கப்படுபவர்கள் பிரதமர் நரேந்திர மோடியோ அல்லது அதானி, அம்பானி போன்ற பெரிய தொழிலதிபர்களோ இல்லை. அவர்கள் எல்லாம் தங்களது அரண்மையில் பாதுகாப்பாக இருப்பார்கள்.
இதன் முழு பாதிப்பையும் இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்கள்தான் அனுபவிக்கப் போகிறார்கள். அதனால் இதுவரை யாரும் எதிர்பார்க்காத பொருளாதார தாக்கம் ஏற்படும்.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.