Ebola precaution in INDIA 
இந்தியா

மத்திய அரசு அறிவுறுத்தல் எதிரொலி- மாநிலங்களில் எபோலா தடுப்பு தீவிரம்..!

நோய் கண்காணிப்பு, மாதிரி சேகரிப்பு, சேமிப்பு மற்றும் பரிந்துரை வழிமுறைகளை உள்ளடக்கிய ஒரு நிலையான செயல்பாட்டு நடைமுறையை (SOP) அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ஜனநாயகக் குடியரசு காங்கோ மற்றும் உகாண்டாவில் தற்போது நிலவிவரும் எபோலா நோய் பரவலை, 'சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலையாக' (PHEIC) உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவித்தது.

அதைத் தொடர்ந்து, மருத்துவமனை தயார்நிலையில் வைத்திருக்குமாறும் விரைவு மீட்பு அமைப்புகளை வலுப்படுத்துமாறும் மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

மத்திய சுகாதாரச் செயலர் எச்சரிக்கை:

தெற்கு சூடான் உட்பட பாதிக்கப்பட்ட பகுதிகளை ஒட்டியுள்ள நாடுகளில் நோய்ப் பரவல் அபாயம் அதிகமாக உள்ளது என்றும், இருப்பினும் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்கப் பகுதிக்கு வெளியே உள்ள நாடுகளுக்கு தற்போதைய அபாயம் குறைவாகவே உள்ளது என்றும் மத்திய சுகாதாரச் செயலர் புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா கூறினார்.

இருப்பினும், அதிகரித்து வரும் சர்வதேச வர்த்தகம் மற்றும் பயணம் காரணமாக சுகாதார அமைப்பின் அனைத்து மட்டங்களிலும் போதுமான தயார்நிலை மற்றும் உடனடி கண்காணிப்பு திறன்களை" மேம்படுத்துமாறு செயலர் எச்சரித்தார்.

அசாதாரண காய்ச்சல் பரவல்கள்

ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டத்தின் (IDSP) கீழ், அசாதாரண காய்ச்சல் பரவல்கள் மற்றும் எபோலா நோயைக் குறிக்கும் அறிகுறிகளைக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறு மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக, சமீபத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப் பயணம் செய்த நபர்களிடையே இந்தக் கண்காணிப்பு அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக காய்ச்சல், பலவீனம், தசை வலி, தலைவலி, தொண்டை வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, தோல் தடிப்பு மற்றும் சிவந்த கண்கள் போன்ற அறிகுறிகளை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டிய எச்சரிக்கை அறிகுறிகள் பட்டியலிட்டுள்ளது.

மேலும், சந்தேகிக்கப்படும் எபோலா நோயாளிகளுக்கான நோய் கண்காணிப்பு, மாதிரி சேகரிப்பு, சேமிப்பு மற்றும் பரிந்துரை வழிமுறைகளை உள்ளடக்கிய ஒரு நிலையான செயல்பாட்டு நடைமுறையையும் (SOP) அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தனிமைப்படுத்தல்:

தொற்றுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் கூடிய, பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட தனிமைப்படுத்தல் மையங்களையும், சிறப்பு ஆம்புலன்ஸ்களையும் தயார்படுத்துமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளர்கள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (PPE), தளவாட ஆதரவு, ஆய்வக வசதிகள் மற்றும் தீவிர சிகிச்சைக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவை போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்யவும் வலியுறுத்தியுள்ளது.

எபோலா தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்களிடமிருந்து பெறப்படும் மாதிரிகளைப் பரிசோதிப்பதற்கு, புனேயில் அமைந்துள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (ICMR) தேசிய வைராலஜி நிறுவனம் (NIV) முழுமையாகத் தயார் நிலையில் இருப்பதாகச் சுகாதாரச் செயலாளர் தெரிவித்தார்.

மாதிரிகளை உரிய நேரத்தில் பரிந்துரைப்பதற்கும் பரிசோதிப்பதற்கும், புனே தேசிய புலனாய்வு முகமை (NIV), விமான நிலையம் மற்றும் துறைமுக சுகாதார அதிகாரிகள், மாநில கண்காணிப்புப் பிரிவுகள் மற்றும் மாவட்ட கண்காணிப்புப் பிரிவுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு வழிமுறைகளை நிறுவ வேண்டியதன் அவசியத்தை மத்திய அரசு தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.