குஜராத் மாநிலத்தில் இணையவழி நிதி மோசடி தொடர்பான புகார்களுக்கு, பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்திற்கு செல்லாமலேயே சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தொடங்க, இ-ஜீரோ எஃப்.ஐ.ஆர் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குஜராத் துணை முதலமைச்சர் ஹர்ஷ் சங்வி, காந்தி நகரில் சைபர் நிதி மோசடி இ-ஜீரோ எஃப்.ஐ.ஆர் சேவையை இன்று தொடங்கி வைத்தார்.
இதன் தொடக்க விழாவில் பேசிய ஹர்ஷ் சங்வி, “இ-ஜீரோ முதல் தகவல் அறிக்கை ( e-Zero FIR) அமைப்பு மூலம், இணையவழி மோசடியால் பாதிக்கப்படவர்கள் தங்கள் விடுகளில் இருந்தபடியே வசதியாக புகார்களை பதிவு செய்ய முடியும்.
மேலும் உரிய நேரத்தில் எடுக்கப்படும் நடவடிக்கை, மோசடி செய்யப்பட்ட தொகையை மீட்பதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கும்” என்று கூறினார்.
இந்த விழாவில் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் குமார் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
காவல்துறை தலைமை இயக்குநர் ஞானேந்திர சிங் மாலிக் கூறுகையில், அனைத்து களப் பிரிவுகளும் இதுபோன்ற புகார்களை தீவிரமாகவும், கவனமாகவும் கையாள வேண்டும் என்று கூறினார்.
மேலும் புதிய அமைப்பை திறம்பட செயல்படுத்துவதன் மூலம் புகார்தாரர்களுக்கு விரைவான நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
சைபர் சென்டர் ஆஃப் எக்சலன்ஸ் அமைப்பின் தலைவர் பிபின் அஹிரா கூறுகையில், “இ-ஜீரோ முதல் தகவல் அறிக்கை செயல்முறையானது 14C உடன் ஒருங்கிணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
1930 என்ற உதவி எண் மூலம் பெறப்படும் இணையவழி நிதி மோசடி தொடர்பான புகார்கள், தானாகவே பூஜ்ஜிய முதல் தகவல் அறிக்கையாக (Zero FIR) உருவாக்கப்பட்டு, பின்னர் அது சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பப்படும்.
மேலும், இதனை தொடர்ந்து காவல்துறையினர் புகார்தாரரை தொடர்புகொண்டு, தேவையான தகவல்களை பெற்று, சட்ட நடைமுறைகளின்படி முதல் தகவல் அறிக்கையை பதிவுசெய்து, உடனடியாக விசாரணையை தொடங்குவார்கள்” என்று பிபின் கூறினார்.