இந்தியா

திருப்பதியில் நெய் தரத்தை பரிசோதிக்க எலக்ட்ரானிக் தொழில் நுட்பம்: ஆந்திர அமைச்சர் தகவல்

சிறிய அளவிலான கலப்படத்தைக் கூட கண்டுபிடிக்க முடியும். நெய் மற்றும் உலர் பழங்கள் உள்பட 60 பொருட்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் எனத் தகவல்.

மாலை மலர்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் பிரசாதமான லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக முந்தைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அரசு மீது தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு கடும் குற்றச்சாட்டை முன் வைத்தார். இது பக்தர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் லட்டு தயாரிக்க பயன்படுத்தும் நெய்யின் தரத்தை சரிபார்க்க எலாக்ட்ரினிக் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படும் என்று ஆந்திர மாநில சுகாதார அமைச்சர் சத்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் சத்ய குமார் யாதவ் கூறியதாவது:-

அதி நவீன உணவு ஆய்வகம் மூலம் எலக்ட்ரானிக் உபகரணங்கள் (E-Tongue and E-Nose) ஆகியவற்றைக் கொண்டு நெய்யில் சிறிய அளவிலான கலப்படத்தைக் கூட கண்டுபிடிக்க முடியும். இந்த ஆய்வகம் திருமலையில் விரைவில் உருவாக்கப்பட உள்ளது.

இந்த உபகரணங்கள் பிரான்சில் இருந்து கொள்முதல் செய்யப்பட இருக்கிறது. இந்த ஆய்வகம் இந்தியாவில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில்தான் உள்ளது. ஆந்திராவில் முதன்முறையாக அமைய இருக்கிறது. 25 கோடி ரூபாயில் அமையவிருக்கும் இந்த ஆய்வகத்தின், 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. அடுத்த மாதத்தில் இருந்து செயல்படும்.

நெய் மற்றும் உலர் பழங்கள் உள்பட லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் 60 பொருட்கள் தரத்தை சரிபார்க்க இந்த ஆய்வகத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் சத்யகுமார் யாதவ் தெரிவித்தார்.