இந்தியா

'வேலைநிறுத்தத்தைக் கைவிடுங்கள்': வங்கி ஊழியர் சங்கங்களுக்கு மத்திய நிதி அமைச்சகம் வேண்டுகோள்!

வங்கி ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 3 நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் அறிவிப்பு.

வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான யு.எப்.பி.யு சார்பில், தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் 28-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 3 நாட்கள் நாடு தழுவிய தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் வங்கிச் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ள நிலையில், மத்திய நிதி அமைச்சகம் ஊழியர் சங்கங்களுக்கு முக்கிய கோரிக்கை விடுத்துள்ளது.

ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள் என்ன?

வங்கி ஊழியர் சங்கங்கள் முக்கியமாக இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத்தை அறிவித்துள்ளன.

தற்போது அமலில் இருக்கும் மாற்று சனிக்கிழமை விடுமுறை முறையை மாற்றி, அனைத்து வாரங்களிலும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 5 நாள் வேலைத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

வங்கிகளில் கொண்டு வரப்பட உள்ள செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று தனது கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

மத்திய அரசின் விளக்கம் மற்றும் பேச்சுவார்த்தை

வங்கி ஊழியர் சங்கங்களின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மத்திய அரசு மற்றும் வங்கி நிர்வாகத் தரப்பில் ஊழியர் சங்கங்களுடன் அவசரப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஊழியர் சங்கங்களுடன் நடத்தப்பட்ட சுமூக பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகை திட்டம் ஏற்கனவே தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், வாரத்தில் 5 நாள் வேலை என்ற கோரிக்கையும் அரசின் தீவிர பரிசீலனையில் தொடர்ந்து இருந்து வருகிறது" என்று தெளிவுபடுத்தியுள்ளது.

வேலைநிறுத்தத்தைக் கைவிட நிதி அமைச்சகம் வலியுறுத்தல்

வங்கி ஊழியர் சங்கங்களின் பெரும்பாலான கோரிக்கைகளுக்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டுவிட்டதாலும், வங்கி ஊழியர்களின் நலன் சார்ந்த பல்வேறு சாதகமான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வருவதாலும் இந்த போராட்டத்தைத் தவிர்க்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் அன்றாட வங்கிச் சேவைகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம், வங்கி ஊழியர்கள் தங்களது 3 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என நிதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக வலியுறுத்தியுள்ளது.

அரசின் இந்த வேண்டுகோளை ஏற்று ஊழியர் சங்கங்கள் போராட்டத்தைத் தள்ளிவைக்குமா என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரியவரும்.

SCROLL FOR NEXT