இந்தியா

ஓட்டுநர் உரிமம் தொடர்பான விதிகளில் புதிய மாற்றம்: போக்குவரத்து அமைச்சகம் ஆலோசனை

குடிமக்களுக்கான போக்குவரத்து நடைமுறைகளை எளிதாக்கவும், ஆவண சரிபார்ப்பு போன்ற கால அளவுகளை குறைக்கவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் உள்ள வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமம் தொடர்பான விதிகளில் சீரமைப்பு செய்து புதிய விதிகளை நடைமுறைப்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இதன்படி தற்போதுள்ள ஓட்டுநர் உரிமம் பொதுவாக 20 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். இந்த செல்லுபடியாகும் காலத்தை, ஓட்டுநர் உரிமம் பெற்ற நபர் 50 வயதை அடையும் வரை நீட்டிப்பதற்கான ஆலோசனையில் போக்குவரத்து அமைச்சகம் ஈடுபட்டு வருகிறது.

மேலும் வாகன உரிமம் தொடர்பான மாற்றங்கள் மற்றும் உரிமம் புதுப்பித்தல் முழுவதுமாகவே டிஜிட்டல் தளங்கள் மூலமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த விதிமுறைகள் மாற்றங்கள் குறித்து பேசிய அதிகாரி ஒருவர், “குடிமக்களுக்கான போக்குவரத்து நடைமுறைகளை எளிதாக்கவும், ஆவண சரிபார்ப்பு போன்ற கால அளவுகளை குறைக்கவும் ஆலோசித்து வருகிறோம்” என்று கூறினார்.