அப்துல் கலாமின் 11-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி நாட்டிற்கு அவரது பங்களிப்பை நினைவுகூர்ந்து சமூக வலைதளங்களில் தலைவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வெளியிட்ட சமூக வலைதள பதிவில், "நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவரும், சிறந்த விஞ்ஞானியும், பாரத ரத்னா விருது பெற்றவருமான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் அவருக்கு மனமார்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறேன்.
'ஏவுகணை நாயகன்' என்று போற்றப்படும் டாக்டர் கலாம், வளர்ந்த, தன்னிறைவு பெற்ற மற்றும் வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருந்தார்.
உள்நாட்டு ஏவுகணை மற்றும் விண்வெளித் திட்டங்களை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்வதில் அவர் ஆற்றிய பங்களிப்பு, இந்திய அறிவியல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது.
அறிவு, ஒழுக்கம், எளிமை மற்றும் தேச சேவை ஆகியவற்றைத் தனது வாழ்வின் அடித்தளமாகக் கொண்ட அவர், நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்களிடையே தன்னம்பிக்கை, புதுமை மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் உணர்வை ஊட்டினார்.
"கனவு என்பது தூக்கத்தில் வருவதல்ல; உங்களைத் தூங்க விடாமல் செய்வதே கனவு" - டாக்டர் கலாமின் இத்தகைய சிந்தனைகள், இன்றும் ஒவ்வொரு இளைஞரும் தங்கள் இலக்குகளில் உறுதியுடன் இருக்க ஊக்கமளித்து வருகின்றன" என்று தனது உறுக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
"இந்தியாவின் விண்வெளி மற்றும் ஏவுகணைத் திட்டங்களின் சிற்பியும் தொலைநோக்குச் சிந்தனையாளருமான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
அறிவியல் துறையில் டாக்டர் கலாம் அவர்களின் சிறப்பான பங்களிப்பு, இந்தியா ஒரு வலிமையான உத்திசார் சக்தியாக உருவெடுப்பதற்கான பாதையை வகுத்துத் தந்தது; அதேவேளையில், அவரது ஞானம் லட்சக்கணக்கானோரைச் சிறந்த சாதனைகளைப் புரியத் தூண்டி, அவர்களின் வாழ்வை ஒளிமயமாக்கியது.
'மக்களின் ஜனாதிபதி'யான டாக்டர் கலாம் அவர்கள், தேசபக்தர்களுக்கு என்றும் ஒரு முன்மாதிரியாகத் திகழ்வார்" என்று அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளான இன்று சமூக வலைதளப் பதிவு வெளியிட்டுள்ள முன்னாள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், "பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் எங்களின் மனமார்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறோம்.
கல்வி, புத்தாக்கம் மற்றும் இளைஞர்களின் ஆற்றல் மீதான அவரது அசைக்க முடியாத நம்பிக்கை, வளர்ந்த நாடாக மாறுவதற்கான இந்தியாவின் பயணத்திற்குத் தொடர்ந்து வழிகாட்டி வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.
ஆந்திர முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "நாட்டிற்குப் பல அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வெற்றிகளைப் பெற்றுத் தந்து, 'ஏவுகணை நாயகன்' என்று போற்றப்பட்ட பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவு நாளில் எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன்.
எளிமை, நேர்மை மற்றும் மனிதாபிமானப் பார்வை போன்ற தனித்துவமான பண்புகளால், கலாம் அவர்கள் 'மக்களின் ஜனாதிபதி'யாகத் திகழ்ந்தார். அந்த மகத்தான ஆளுமையின் நினைவு நாளில், அவருக்கு எனது அஞ்சலியைச் சமர்ப்பிக்கிறேன்.
கல்வி, புத்தாக்கம் மற்றும் இளைஞர்களின் ஆற்றல் மீது அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை, வளர்ந்த நாடாக இந்தியா மேற்கொள்ளும் பயணத்திற்குத் தொடர்ந்து வழிகாட்டி வருகிறது" என்று கூறியுள்ளார்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் புண்ணியதிதியில், அவருக்கு எனது பணிவான அஞ்சலிகளைச் செலுத்துகிறேன்.
அவரது எளிமை, நேர்மை மற்றும் தேசத்திற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு நிறைந்த வாழ்க்கை, தலைமுறைகள் பெரிய கனவுகளைக் காணவும், அச்சமின்றிப் புதுமைகளைப் புகுத்தவும், தன்னலமற்ற அர்ப்பணிப்புடன் நாட்டிற்குச் சேவை செய்யவும் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.
கல்வி, புதுமை மற்றும் இளைஞர்களின் ஆற்றல் மீதான அவரது அசைக்க முடியாத நம்பிக்கை, இந்தியா ஒரு வளர்ந்த தேசத்தை நோக்கிய பயணத்தைத் தொடர்ந்து ஒளிரச் செய்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் தனது எக்ஸ் தள பதிவில், "மறைந்த டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் அவருக்குப் பணிவான அஞ்சலியைச் செலுத்துகிறேன்.
டாக்டர் கலாமுடன் தனிப்பட்ட முறையிலும் தொழில் ரீதியாகவும் பழகும் வாய்ப்பைப் பெற்றிருந்தது ஒரு பெரும் பேறாகும்.
எளிமை, நேர்மை மற்றும் நாட்டின் மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு நிறைந்த அவரது வாழ்க்கை, பெரிய கனவுகளைக் காணவும், அச்சமின்றிப் புதுமைகளைப் படைக்கவும், சுயநலமற்ற ஈடுபாட்டுடன் நாட்டிற்குச் சேவையாற்றவும் பல தலைமுறையினரைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.
கல்வி, புத்தாக்கம் மற்றும் இளைஞர்களின் ஆற்றல் மீது அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை, வளர்ந்த நாடாக இந்தியா மேற்கொள்ளும் பயணத்திற்குத் தொடர்ந்து வழிகாட்டி வருகிறது" என்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.