இந்தியா

Video: பால்கனியில் இருந்து தவறி விழுந்த நாய்: உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய இளைஞர்!

தன் உயிரைப் பொருட்படுத்தாமல் வாயில்லா ஜீவனைக் காப்பாற்றிய இளைஞருக்கு இணையவாசிகள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்

புதுடெல்லி அருகே குடியிருப்புப் பகுதியின் மேல் மாடி பால்கனியில் இருந்து தவறி விழுந்து, தெருவிளக்கு மின்கம்பத்தின் உச்சியில் சிக்கித் தவித்த வளர்ப்பு நாயை இளைஞர் ஒருவர் துணிச்சலாக ஏறி மீட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிப் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

சம்பவத்தின் பின்னணி

நேற்று 'கர் கே கலேஷ்' என்ற எக்ஸ் தளப் பக்கத்தில் இந்த நெகிழ்ச்சியான வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்து பால்கனியில் இருந்து வளர்ப்பு நாய் ஒன்று எதிர்பாராதவிதமாகக் கீழே விழுந்துள்ளது.

அதிர்ஷ்டவசமாகத் தரையில் விழாமல், அருகிலிருந்த தெருவிளக்கு மின்கம்பத்தின் உச்சியில் அந்த நாய் சிக்கிக்கொண்டது. தரையில் இருந்து பல அடி உயரத்தில் இருந்ததால் கீழே இறங்க முடியாமல் அந்த நாய் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தது.

துணிச்சலாக மீட்ட இளைஞர்

திருமணத்திற்கு முந்தைய பாரம்பரிய இரவு நேர ஊர்வலமான 'ஜாகோ' நிகழ்ச்சிக்குச் சென்று கொண்டிருந்த ஒரு குழுவினர், நாய் மின்கம்பத்தில் சிக்கியிருப்பதைக் கவனித்துள்ளனர்.

கீழே நாயின் உரிமையாளர் பதற்றத்துடன் காத்திருக்க, சுற்றியிருந்த பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்தக் குழுவில் இருந்த மோஹித் என்ற இளைஞர் சற்றும் தயங்காமல் மின்கம்பத்தில் ஏறத் தொடங்கினார்.

சுற்றியிருந்தவர்கள் உற்சாகக் குரல் எழுப்ப, மின்கம்பத்தின் உச்சிக்குச் சென்ற மோஹித், பயந்திருந்த பழுப்பு மற்றும் வெள்ளை நிற நாயைப் பத்திரமாகப் பிடித்து தனது கைகளில் ஏந்தியவாறு மெதுவாகக் கீழே இறங்கினார். பின்னர் அந்த நாய் அதன் உரிமையாளரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.

குவியும் பாராட்டுகள்

தன் உயிரைப் பொருட்படுத்தாமல் வாயில்லா ஜீவனைக் காப்பாற்றிய மோஹித்தின் செயலுக்கு இணையவாசிகள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

"மனிதநேயம் இன்னும் அழிந்துவிடவில்லை என்பதற்கு இதுவே சாட்சி" என்றும், "உயிரைப் பணயம் வைத்துச் செய்த தன்னலமற்ற உதவி" என்றும் பலரும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT