இந்தியா

இருமல் மருந்துகளுக்கு டாக்டர் சீட்டு கட்டாயம் - மத்திய சுகாதாரத்துறை

கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருமல் மருந்துகளை குடித்த சில குழந்தைகள் உயிரிழந்தனர்

மத்திய சுகாதாரத்துறையின் அறிவிப்பால் இருமல் மருந்துகளுக்கு இனி டாக்டர் சீட்டு கட்டாயம் என்று மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

கலவையில் முறைகேடு

காய்ச்சல், தலைவலி, இருமல் போன்ற நோய்களுக்கு அலோபதி மருந்துகளை பெறுவதில் முன்பு எளிதான சூழ்நிலை இருந்தது. ஆனால் அந்த மருந்துகளின் கலவையில் பல முறைகேடுகள் நடப்பதால் அவற்றின் தயாரிப்பு, வினியோகம் மற்றும் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில் இருமல் மருந்துகளுக்கும் (சிரப்) கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருமல் மருந்துகளை குடித்த சில குழந்தைகள் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து அதன் மீதான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடங்கின. அதன்பேரில் டிசம்பர் மாதம் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதாவது 1945-ம் ஆண்டு மருந்து விதிகளில் திருத்தம் செய்வதற்காக கருத்துகளை பெறும் அறிவிப்புதான் அது. இந்த அறிவிப்புக்கு முன்புவரை 4 திருத்தங்கள் அதில் செய்யப்பட்டு இருந்தன. தற்போது 5-வது திருத்தம் செய்யப்பட்டு இருக்கிறது.

'கே' பிரிவு

அந்த விதிகளில் அட்டவணை 'கே' யில் திருத்தம் செய்யப்பட்டு இருக்கிறது. "கே" பிரிவு விதியானது, குறிப்பிட்ட சில வகை மருந்துகளுக்கு, 1940-ம் ஆண் டின் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம் மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட சில விதிகளில் இருந்து விலக்கு அளிக்கிறது.

அதாவது குறிப்பிட்ட சில மருந்துகளை விற்பதற்கு உரிமத்தேவைகள் இல்லை என்ற நிலை இருந்தது. இதன்படி 'சிரப்'புகள் கே பிரிவில் இருந்தன. இதனால் அவற்றுக்கும் விலக்கு பொருந்தியது. ஆனால் தற்போது செய்யப்பட்டுள்ள திருத்தத்தில் 'சிரப்' என்ற சொல், அதில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது.

இதன்படி முறையான உரிமம் பெற்றே 'சிரப்'புகளை விற்க முடியும் என்ற நிலை கட்டாயமாகி இருக்கிறது. எனவே, அவற்றின் விற்பனைக்கு டாக்டர்களின் மருந்து சீட்டு கட்டாயம்.

முறையான உரிமம்

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், "அட்டவணை கே-ன் 13-வது பிரிவு. 1,000-க்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட கிராமங்களில், சில சில்லரை விற்பனை உரிம விதிகளை பின்பற்றத் தேவையின்றி இருமல் மருந்துகளை விற்பனை செய்ய அனுமதித்தது.

தற்போது அதில் 'சிரப்' என்ற சொல் நீக்கப்பட்டதால், இருமல் 'சிரப்'புகளுக்கு இந்த விலக்கு இனி கிடைக்காது. இதன் விளைவாக, சிறிய கிராமங்களில் இருமல் 'சிரப்புகளின் விற்பனையும், வினியோகமும், 1940-ம் ஆண்டின் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம் மற்றும் அதன் கீழ் வகுக்கப்பட்ட விதிகளின்படி, முறையாக உரிமம் பெற்ற மருந்தகங்கள் மூலமாக மட்டுமே நடைபெறும்" என கூறப்பட்டு உள்ளது.