இந்தியா

ஜலதோஷம் என சென்ற 19 மாத குழந்தையின் கண் பார்வை பறிபோனது – மூக்கு சொட்டு மருந்தை கண்ணில் ஊற்றிய மருத்துவர்!

மத்திய பிரதேசத்தில் முதன்மை மருத்துவ அதிகாரி தலைமையில் 3 பேர் கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில், மருத்துவரின் அலட்சியத்தால் 19 மாதக் ஆண் குழந்தையின் கண் பார்வை முழுமையாகப் பறிபோயுள்ளதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தையின் கண்ணில் தவறான மருந்தை ஊற்றியதே இதற்குக் காரணம் என பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஜலதோஷத்திற்கு வந்த சோதனை..

சாகர் மாவட்டத்தின் பாண்டா பகுதியில் வசிப்பவர் இந்திரஜ் விஸ்வகர்மா. இவரது 19 மாதக் குழந்தை வினய் விஸ்வகர்மாவுக்குக் கடுமையான சளி, இருமல் மற்றும் கண்களில் லேசான சிகப்பு நிறம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கடந்த மே 29 அன்று, குழந்தையை அங்குள்ள அரசு சிவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு பணியில் இருந்த அரசு மருத்துவர் ஒருவர், குழந்தையை பரிசோதித்துவிட்டு சளிக்காக தர வேண்டிய மூக்கு சொட்டு மருந்தை மாற்றி குழந்தையின் இரண்டு கண்களிலும் போட்டுவிட்டு, பாராசிட்டமால் சிரப் மற்றும் ஒரு ஊசியும் போட்டதாக குழந்தையின் தந்தை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

அடுத்த சில மணி நேரத்தில் நேர்ந்த சோகம்..

மருந்து ஊற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே குழந்தையின் நிலைமை மோசமடையத் தொடங்கியது. கண்கள் இரண்டும் வீங்கியதால் குழந்தை கதறியுள்ளது.

பல மணி நேரம் மருத்துவமணையில் காத்திருந்தும் நிலைமை சரியாகாததால் அங்கிருந்து, சாகர் அரசு மருத்துவமனைக்கு மாற்றினர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக போபால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பார்வை போனதை உறுதி செய்த எய்ம்ஸ்..

போபால் எய்ம்ஸ் மருத்துவமனையில் குழந்தையைப் பரிசோதித்த நிபுணர்கள், குழந்தையின் இரண்டு கண்களின் பார்வையும் முற்றிலும் பறிபோய்விட்டது என்றும், இனி அதனை சரிசெய்ய முடியாது என்றும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

தவறான சிகிச்சை மற்றும் மருத்துவக் குறைபாடே இந்த பார்வை இழப்புக்குக் காரணம் என்பதை எய்ம்ஸ் மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாகக் குழந்தையின் தந்தை கூறியுள்ளார்.

அதிகாரிகள் அதிரடி விசாரணை..

இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாகக் குழந்தையின் தந்தை பாண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தமக்கு மருத்துவரின் பெயர் தெரியாது என்றும், நேரில் பார்த்தால் அடையாளம் காட்ட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பேசிய மருத்துவ அதிகாரி ஒருவர், இவ்விவகாரம் குறித்து விசாரிக்க முதன்மை மருத்துவ அதிகாரி தலைமையில் 3 பேர் கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.