இந்தியா

குரங்கு-மலை அணில் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு உணவு அளிக்கக்கூடாது: யாத்ரீகர்களுக்கு வனத்துறை வேண்டுகோள்

பாம்பை பிடிக்க வனத்துறையிடம் 3 குழுக்கள் உள்ளன. அவற்றில் 2 குழுக்கள் சன்னிதானத்திலும், ஒன்று மரக்கூட்டத்திலும் செயல்படுகிறது.

சபரிமலை யாத்திரை பக்தர்களின் பாதுகாப்புக்காக வனத்துறை பல நடவடிக்கைகள் எடுத்துள்ளது. வனவிலங்குகளுக்கு உணவளிக்க வேண்டாம் என யாத்ரீகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது விலங்குகளின் தாக்குதலுக்கு வழிவகுக்கும் என்பதால், யாத்ரீகர்கள் சட்டங்களை கடைபிடிக்க வேண்டும்.

மண்டல பூஜை தொடங்கியிருப்பதை தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பத்தர்கள் யாத்திரை வருகின்றனர். அவர்களை வன விலங்குகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

முக்கியமாக பாம்புகளை பிடிக்கவும், யானைகளை விரட்டவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதுகுறித்து சன்னிதானம் சரக வன அலுவலர் டி.கே.மனோஜ் கூறியதாவது:-

24 மணி நேரம் ரோந்து பணி

மண்டல-மகரவிளக்கு பருவம் தொடங்கியதில் இருந்து, சபரிமலை சன்னிதானம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வன-வனவிலங்கு அதிகாரிகள் இதுவரை 40 பாம்புகளை பிடித்துள்ளனர். பிடிக்கப்பட்ட அனைத்து பாம்புகளும், 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அம்பலகடவு பகுதியில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது. பாம்பை பிடிக்க வனத்துறையிடம் 3 குழுக்கள் உள்ளன. அவற்றில் 2 குழுக்கள் சன்னிதானத்திலும், ஒன்று மரக்கூட்டத்திலும் செயல்படுகிறது. வனவிலங்கு இருப்பு பகுதிகளாக வண்டிதாவளம், உரல்குழி, புல்லுமேடு மலையேற்ற பாதை மற்றும் சாரல்மேடு ஆகிய 4 சாத்தியமான இடங்களை வனத்துறை அடையாளம் கண்டுள்ளது. இந்த இடங்களில் 24 மணி நேரமும் ரோந்து பணி நடைபெறுகிறது.

வனவிலங்குகள் இருக்கின்றனவா? என்று சரிபார்ப்பதற்காக தினமும் புல்லுமேடு வழியாக வனப்பாதையில் வரும் ஐயப்ப பக்தர்களின் முதல் குழு, வனத்துறை அதிகாரிகளுடன் கழுத்தக்குழிக்கு செல்லும். இது தினமும் கழுத்தக்குழியில் இருந்து வண்டி தாவளத்திற்கு வரும். கடைசி ஐயப்ப பக்தர்கள் குழுவும் அதே அதிகாரிகளுடன் செல்லும்.

தடுப்பூசி

காட்டு யானைகளை விரட்டுவதற்காக 5 பேர் கொண்ட யானைப்படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. யானைகளை விரட்டுவதற்காக அந்த படையிடம் இரண்டு பம்ப்-ஆக்சன் துப்பாக்கிகளும், பட்டாசுகளும் உள்ளன.

யாத்ரீகர்கள் வனவிலங்குகளுக்கு உணவளிக்கக் கூடாது. அவ்வாறு உணவளிப்பது மிகவும் ஆபத்தானது. இது தடை செய்யப்பட்டிருந்தாலும், பலர் சட்டவிரோதமாக குரங்குகளுக்கும், மலை அணில்களுக்கும் உணவளித்து வருகின்றனர். இந்த விலங்குகள் யாத்ரீகர்களை கடித்தாலோ அல்லது கீறினாலோ, அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியிருக்கும். யாத்ரீகர்கள் இதுபோன்ற கடுமையான சூழ்நிலைகளை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT