இந்தியா

‘அனுசரித்துப் போ’ என மகள்களிடம் கூறாதீர்கள்... அவர்களின் புகார்களை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள் - அலகாபாத் உயர் நீதிமன்றம்

சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படும் தலையீடு ஈடுசெய்ய முடியாத இழப்பைத் தவிர்க்க உதவும்.

குடும்பத்தில் ‘அனுசரித்து செல், இணங்கிப் போ’ என மகள்களிடம் கூறாதீர்கள். அவர்களது பிரச்னைகளை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள் என பெற்றோர்களுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

மேலும் இத்தகைய அறிவுரை, உங்களை அறியாமலேயே குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைந்து, இறுதியில் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய தொடர்ச்சியான வன்முறைக்குப் பெண்களை ஆளாக்கக்கூடும் என்றும் கூறியுள்ளது.

நீதிபதி ராஜேஷ் சிங் சௌஹான் மற்றும் நீதிபதி அப்தேஷ் குமார் சௌத்ரி ஆகியோர் அடங்கிய அமர்வின் இந்தக் கருத்து பலரிடமும் பரவலான பாராட்டுகளைப் பெற்றுவருகிறது.

வரதட்சணைக் கொடுமையால் 25 வயது இளம்பெண்ணும், அவரது கைக்குழந்தையும் கொலை செய்யப்பட்ட வழக்கின் மேல்முறையீட்டு மனுவிசாரணையில் உயர் நீதிமன்றம் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளது.

வழக்கின் பின்னணி

இந்த வழக்கு, 25 வயதான மீனா தேவி மற்றும் அவரது 15 மாதக் குழந்தை கடந்த 2011ம் ஆண்டு, வரதட்சணைக் கொடுமையால் அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பானது.

மீனாவின் திருமணத்தின்போது அவரது குடும்பத்தினர் ரூ.2.26 லட்சம் மாப்பிள்ளை வீட்டிற்கு கொடுத்துள்ளனர். திருமணத்திற்குப் பிறகு, கணவர் தினேஷ் குமார், அவரது பெற்றோர் மற்றும் சகோதரர்கள் இணைந்து ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் கூடுதலாகக் கேட்டு மீனாவை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்திரவதை செய்துள்ளனர்.

தனக்கு நடக்கும் கொடுமைகள் குறித்து மீனா பலமுறை போன் மூலமாகவும், நேரிலும் பெற்றோர் மற்றும் சகோதரர்களிடத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் மீனாவின் பெற்றோர் தரப்பு இது சாதாரணப் பிரச்னை நாளடைவில் சரியாகிவிடும் எனக் கூறி சமாதானப்படுத்தி வந்துள்ளனர்.

இதன் விளைவு, மீனா மற்றும் அவரது 15 மாதக் குழந்தை இருவரும், தினேஷ் வீட்டில் உடலில் காயங்களுடன் உயிரிழந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், மீனாவின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

இந்த ஆயுள் தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் இந்த தண்டனையை உறுதிசெய்து இந்தக் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றத்தின் முக்கிய கருத்துகள்

மகள்களின் தொடர்ச்சியான புகார்களை, கணவன்-மனைவிக்கு இடையேயான சாதாரண கருத்து வேறுபாடுகள் என கருதக்கூடாது. மாறாக, அவை உதவி, பாதுகாப்பு மற்றும் தலையீட்டிற்கான கோரிக்கைகள் என்பதனை பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

பயம், அவமானம் அல்லது துன்புறுத்தல் குறித்துத் தனது பெற்றோரையோ அல்லது உறவினர்களையோ மீண்டும் மீண்டும் அணுகும் ஒரு பெண்ணின் குரல், பரிவுடனும், உடனடியாகவும் கேட்கப்பட வேண்டும்.

அத்தகைய பெண்ணுக்கு ஆதரவளிப்பதும், அவரது பாதுகாப்பையும், கண்ணியத்தையும் பேணுவதும் குடும்பத்தின் தார்மீக மற்றும் சமூகப் பொறுப்பாகும். பெண்கள் அமைதியாகத் துன்பப்பட நிர்பந்திக்கப்படுவதில்லை என்பதை சமூகங்களும் உறுதி செய்ய வேண்டும்.

“தாமதமான வருத்தமும், நீதிமன்ற வழக்குகளும் இழந்த ஒரு உயிரை மீண்டும் கொண்டு வர முடியாது”. சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படும் தலையீடு ஈடுசெய்ய முடியாத இழப்பைத் தவிர்க்க உதவும். என தெரிவித்தனர்.