டெல்லி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன், திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த எம்.பி.க்கள் கனிமொழி, ஆர். ராசா, டி.ஆர். பாலு மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரானது வரும் நவம்பர் 30 முதல் டிசம்பர் 3 வரை நடைபெற உள்ள நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மீண்டும் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி தற்போது அறிமுகம் செய்யப்படவுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவில் மாற்றங்கள் செய்யப்பட்டு, மாநிலங்கள் முழுவதும் மக்களவை இடங்கள் 50 சதவீதம் வரை அதிகரிக்கப்பட உள்ளது.
இந்த மசோதாவிற்கு தமிழகத்தில் தவெக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
மேலும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியதை தொடர்ந்து, தற்போது தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவளிப்பதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தெரிவித்தார்.
இதையடுத்து இன்று இரவு டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன், திமுக எம்.பி.க்கள் கனிமொழி, ஆர். ராசா, டி.ஆர். பாலு மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக கடந்த ஏப்ரல் 16 அன்று தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தார்.
இந்த மசோதாவானது மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543-லிருந்து 850 ஆக உயர்த்தவும், பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்கவும் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த மசோதாவிற்கு, மொத்தமுள்ள 528 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 298 பேர் ஆதரவாகவும், 230 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.
இதைத்தொடர்ந்து பெரும்பான்மைக்கு 352 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், பெரும்பான்மை கிடைக்காமல் மசோதா திரும்ப பெறப்பட்டது.
மேலும் இந்த மசோதா தமிழகத்தின் நலனை பாதிப்பதாக கூறி திராவிட முன்னேற்ற கழகம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தற்போது தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ள சூழலில், தமிழகத்தில் அரசியல் கூட்டணி மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.